Tamil Reader

“இந்தியாவிற்கு உதவுங்கள்” பாகிஸ்தான் பிரதமரிடம் கோரிக்கை வைக்கும் அந்நாட்டு மக்கள் – துளிர்க்கும் மனிதம்..!

india pakistan

மருத்துவமனையில் இடம் இல்லை. அப்படியே இடம் கிடைத்தாலும் ஆக்சிஜன் இல்லை. இறந்தால் உடலைத் தகனம் செய்ய சுடுகாட்டில் இடமில்லை. இதுதான் தற்போதைய இந்தியாவின் நிலைமை. பெரும் இருளுக்குள் சிக்கி மூச்சு விடத் திணறும் இந்தியாவிற்கு உதவுங்கள் என பாகிஸ்தான் மக்கள் தங்களது பிரதமர் இம்ரான் கானுக்கு சமூக வலைத்தலங்கள் வாயிலாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால், ஆக்சிஜனை வழங்கி இந்தியாவைக் காப்பாற்றுங்கள் என ஒருவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அனைத்திற்கும் மேலானது மனிதநேயம். யாரும் இவ்வுலகில் துன்பப்படக்கூடாது என்கிறார் மற்றொருவர்.

இந்தியாவின் நிலைமை கவலையளிக்கிறது. இப்படியான துயர் யாருக்கும் வரக்கூடாது. நமக்குள் பல வேற்றுமைகள் இருந்தாலும் மனிதத்தின் முன் நாம் அனைவரும் ஒன்றே. இந்த அகால சூழலில் பாகிஸ்தான் இந்தியாவின் பக்கம் நிற்கும் என ஷாஹித் பாட்டி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி பல பாகிஸ்தான் குடிமக்கள் இந்தியாவின் துயர் தாங்காமல் அந்நாட்டு பிரதமருக்கு தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைத்துவருகின்றனர். இது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, பாகிஸ்தானைச் சேர்ந்த இதி அறக்கட்டளை, இந்தியாவிற்கு 50 ஆம்புலன்ஸ்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. மருத்துவ உதவியாளர்கள், துணைப் பணியாளர்கள் அவர்களுக்கான உணவு முதலிய செலவுகளை நாங்களே ஏற்கிறோம் என அந்த அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து இதி அறக்கட்டளை அனுப்பிய கடிதத்திற்கு இந்தியாவின் சார்பில் இதுவரை பதிலளிக்கப்படவில்லை.

இதையும் படிங்க.!