Tamil Reader

என்ன நடக்கிறது ஆப்கானிஸ்தானில்? யார் இந்த தாலிபான்கள்? பதைபதைக்க வைக்கும் ரத்த சரித்திரம்..!

சின்னஞ்சிறு நாடு மீண்டும் தலைப்புச் செய்தியாய் மாறியிருக்கிறது. உலக நாடுகளே கண் சிமிட்டாமல் அந்த நாட்டை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. அவசர அவசரமாக அந்த நாட்டில் தங்கியிருந்த தங்கள் தேசத்தினரை விமானங்கள் மூலம் பத்திரமாக தாயகம் திரும்ப உலக நாடுகள் முனைப்பு காட்டுகின்றன. கத்தியின்றி ரத்தமின்றி தலைநகரே ஆயுதம் ஏந்திய குழுக்களால் வீழ்ந்து நிற்கிறது. தகிக்கும் உலக அரசியலில் கடந்த 2 நாட்களாக ஹாட் டாப்பிக்காக மாறிப்போயிருக்கிறது ஆப்கானிஸ்தான் – தாலிபான்கள்!

யார் இந்த தாலிபான்கள்?

தாலிபான்கள் யார் என்பதை புரிந்து கொள்ள 40 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வது அவசியம். 1978ல் சோவியத் யூனியன் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் இடது சாரிகள் கம்யூனிஸ்ட் அரசை நிறுவினர். இதற்கு ஆப்கானிஸ்தான் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாளடைவில் இது பெரும் தலைவலியாக உருவெடுத்தது. அரசை எதிர்க்க முஜாஹிதீன் எனும் போராளிக் குழு உருவானது. இது கம்யூனிஸ்ட் அரசை எதிர்த்து மக்களை திரட்டி கடுமையாக போராடியது. இதனால் ஒரே ஆண்டில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது. போராளிக்குழுக்களை சமாளிக்க சோவியத் யூனியன் தங்கள் ராணுவத்தை ஆப்கானிஸ்தானுக்குள் அனுப்பியது. இதுதான் ஆப்கானிஸ்தான் ரத்த பூமியாக மாறுவதற்கு தொடக்கப் புள்ளி.

30 years on, Russia views Afghan war with pride
சோவியத் படை

சோவியத்தின் பரம வைரியான அமெரிக்கா, முஜாஹிதீன் அமைப்புக்கு ஆயுதங்களை வழங்கி சோவியத் யூனியனை ஒழிக்க தேவையான உதவிகளை செய்தது. 10 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடித்த சோவியத் யூனியன், பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினரை பலிகொடுத்தது. பொதுமக்களும் பெருமளவில் கொன்று குவிக்கப்பட்டனர். பேரிழப்பை சந்தித்த சோவியத், வேறு வழியின்றி 1988ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றிலுமாக வெளியேறியது.  ஆப்கனை யார் ஆட்சி செய்வது என்பதில் தொடங்கி பல்வேறு பிரச்னைகளால் போராளிக் குழுக்கள் இடையே மோதல் வெடித்தது. அது உள்நாட்டு யுத்தத்திற்கு வழிவகுத்தது. அதன் நீட்சியாக 1994ம் ஆண்டு உருவாக்கப்பட்டதே தாலிபான் அமைப்பு. சோவியத்தை எதிர்க்க அமெரிக்காவால் பெரிதும் உதவப்பட்ட முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பலர் தாலிபானில் இணைந்தனர். இதனால் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தது. மக்களின் பெரும் ஆதரவுடன் 1996ல் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை நிறுவியது தாலிபான் அமைப்பு.

ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்தது எப்படி?

2001 செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் உலகையே உலுக்கியது. ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமான அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் கதையை முடிக்க அமெரிக்கா முனைப்பு காட்டியது.

How the 9/11 terror attacks unfolded | Telegraph Time Tunnel - YouTube
இரட்டை கோபுர தாக்குதல் (2001)

ஒசாமா பின்லேடனுக்கு தாலிபான்கள் அடைக்களம் கொடுத்திருந்தனர். அவர் ஆப்கானிஸ்தானில் தனது படைப்பட்டாளத்துடன் இருந்து வந்தார். பின்லாடனை ஒப்படைக்குமாறு அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தாலிபான்களிடம் கேட்டது. அவர்கள் தர மறுக்கவே, கோபத்தின் உச்சிக்கு சென்ற அமெரிக்கா தனது படை பலத்துடன் NATO வீரர்கள் புடைசூழ ஆப்கானிஸ்தானில் போர் தொடுத்தது.

அமெரிக்கா – தாலிபான்கள் இடையிலான போர்

சோவியத் யூனியனை எதிர்த்து சண்டையிட தன்னால் வளர்க்கப்பட்ட தாலிபான் அமைப்பை ஒட்டுமொத்தமாக அழிக்க களமிறங்கியது அமெரிக்கா. 2001 அக்டோபர் 7ஆம் தேதி அமெரிக்க ராணுவம் தலைமையிலான NATO பாதுகாப்புப் படை கூட்டணி ஆஃப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. அமெரிக்காவின் படை பலத்தால் டிசம்பர் முதல் வாரத்திலேயே தாலிபான் ஆட்சி நிலைகுலைந்தது. தாலிபான் அமைப்பின் மூத்த தலைவர்கள் தப்பியோடினர். அந்த தேடுதல் வேட்டையில் அமெரிக்காவின் இலக்காக இருந்த ஒசாமா பின்லேடன் கிடைக்கவேயில்லை. ஆனால் ஆப்கானிஸ்தான் கொடுத்த விலையோ கொஞ்ச நெஞ்சம் அல்ல. அமெரிக்காவின் தாக்குதலால் பலர் கொல்லப்பட்டனர்.

Bin Laden's ambitious final plans - The Washington Post
ஒசாமா பின்லேடன்

தாலிபான்களை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்கிவிட்ட அமெரிக்கா, 2001ல் பொம்மை அரசை நிறுவி நாட்டாமை செய்யத் தொடங்கியது. ஆப்கானிஸ்தானில் ஒழிந்துள்ள பயங்கரவாதிகளை அழிக்கப்போவதாக அறிவித்த அமெரிக்கா அதற்காக 164 லட்சம் கோடி ரூபாய் வரை செலவு செய்தது. 20 ஆண்டுகளில் நடந்த சின்னச்சின்ன யுத்தங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இருதரப்பிலும் கொல்லப்பட்டனர்.

அமெரிக்கா பின்வாங்கியது ஏன்?

அமெரிக்க ராணுவம் தொடர்ந்து செலவு செய்து ஆப்கானிஸ்தானில் நிலைக்க முடியாது என்பதை உணர்ந்தது. இதனால் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தது. தீவிரவாதத்தை எக்காரணத்தை கொண்டும் கையில் எடுக்கக்கூடாது என்பது அமெரிக்காவின் முக்கிய நிபந்தனையாக இருந்தது.

Taliban seize key district in northern Afghanistan | Arab News
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை வீரர்

2019ல் அமெரிக்கா – தாலிபான்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு தோஹாவில் ஒரு முடிவுக்கு வந்தது. இரு தரப்புக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. எதிர்வரும் செப்டம்பர் 11க்குள் தனது முழு படையையும் வாபஸ் பெற்றுக்கொள்வதாக அமெரிக்கா அறிவித்தது.

UN Report Shows Member States Grow Doubtful About Future of US-Taliban Deal | Voice of America - English
Doha Meating; Credit: Reuters
தாலிபான்களின் எழுச்சி

அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தை சாதகமாக்கிக் கொண்ட தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்ற திட்டமிட்டனர். ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்றதும் மெல்ல மெல்ல அமெரிக்க படைகள் நாடு திரும்புவதை கவனித்த தாலிபான்கள், தங்கள் ஆதரவு பகுதிகளை முதலில் கைப்பற்றினர். அதனை தொடர்ந்து மக்களின் எதிர்ப்புகளின்றி முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். முஜாஹிதீன்களை தொடர்ந்து அமெரிக்காவால் உருவாக்கிவிடப்பட்ட பொம்மை அரசின் ஆப்கன் ராணுவத்தினரால் தாலிபான்களை எதிர்த்து ஒன்றுமே செய்ய முடியவில்லை. உயிருக்கு பயந்து பலரும் ஓட்டம் பிடித்தனர். இது தாலிபான்களுக்கு சாதகமானது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் தன் வசம் வீழ்வதை கண்ட தாலிபான்கள் முன்னேறிச் சென்று தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

Taliban sweep into Afghan capital after government collapses
ஆப்கன் அதிபர் மாளிகையில் தாலிபான்கள்
தாலிபான்களின் திட்டம் என்ன?

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் மக்கள் யாரும் அஞ்சத் தேவையில்லை என கூறியுள்ளனர். நாட்டில் அமைதி நிலவ பாடுபடுவோம் என்றும் எதிர்வரும் 19ம் தேதி சுதந்திர தினத்தன்று புதிய ஆட்சி அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் கடுமையான சட்டங்களில் தளர்வுகள் அளிப்போம் எனவும் தாலிபான்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுவரை சொற ஆண்டுகள் மட்டுமே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த அனுபவம் உள்ள தாலிபான்கள் இனி வரும் காலங்களில் என்ன செய்ய காத்திருக்கிறார்கள்? அவர்களின் கொள்கை என்னவாக இருக்கும்? அவர்களை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளுமா என்பதையெல்லாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

இதையும் படிங்க.!