Tamil Reader

விவாகரத்துப் பெறுகிறார் பில்கேட்ஸ் – முடிவுக்கு வரும் 27 ஆண்டுகால இல்லற வாழ்க்கை..!

_gates

“இவரு பெரிய பில்கேட்ஸ்” இதைக் கேட்காத காதுகளே தமிழகத்தில் இருக்காது. அமெரிக்காவில் 1970 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஆரம்பிக்கும்போது பில்கேட்ஸ் அவர்களுக்கு தான் உலகப் பணக்காரராக வருவோம் என தெரிந்திருக்காது. அந்தப் பட்டியலில் பலமுறை முதலிடம் வகித்த பில்கேட்ஸ் தற்போது நான்காம் இடத்தில் இருக்கிறார். தொழில், வளர்ச்சி, பணம் என்பதையும் தாண்டி தனது மனைவி மெலிண்டாவின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி உலகம் முழுவதிலும் பசி, பாலின சமத்துவம், அன்றாட தேவைகள் ஆகியவற்றிற்கு உதவிபுரிந்தும் வந்தார்.

1980 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மேலாளராக வேலைக்குச் சேர்ந்த மேண்டாவின் மீது காதல்கொண்டார் பில்கேட்ஸ். மெலிண்டாவும் ஓகே சொல்லவே 1994 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 27 ஆண்டுகள் கழித்து இருவரும் விவாகரத்துப் பெற இருப்பதாக அறிவித்துள்ளனர்.

விவாகரத்து

இதுதொடர்பாக பில் கேட்ஸ் தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்துத் தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்து வரப்பட்டுள்ளன. இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம். எனினும், எங்களது திருமண வாழ்வை முடித்துக் கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இவர்கள் ஆரம்பித்த அறக்கட்டளையின் இணைத் தலைவர்களாகவும் அறங்காவலர்களாகவும் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா தொடர்ந்து செயல்படுவார்கள் என அறக்கட்டளை தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிங்க.!