Tamil Reader

ஆசையாய் வளர்த்த ஆட்டை கோவிலுக்கு பலி கொடுப்பதா? – கலெக்டருக்கு மெயில் அனுப்பி ஆட்டை காப்பாற்றிய சிங்கப்பெண்!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கருநீலம் கிராமத்தில் வசித்து வருபவர் டில்லி பாபு. இவர் கோயிலுக்கு பலியிடுவதற்காக வெள்ளாடு ஒன்றை வளர்த்து வந்தார். வெள்ளிக்கிழமையான இன்று கோவில் திருவிழாவில் பலியிட போவதாக இருந்த நிலையில் டில்லி பாபுவின் 17 வயது மகள் மகேஸ்வரி தான் ஆசையாக வளர்த்து வந்த ஆட்டை கோயிலுக்கு பலியிடக்கூடாது என பெற்றோருடன் சண்டையிட்டுள்ளார்.

வீட்டில் யாரும் தனது பேச்சை கேட்க தயாராக இல்லாததால் புத்திசாலித்தனமாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திற்கு உருக்கமாக மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். மெயிலில் மாணவி எழுதிய விபரங்களை படித்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், உடனடியாக கால்நடைத்துறைக்கு ஆட்டை காப்பாற்றி மகேஸ்வரியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்
மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்

சம்பவ இடத்திற்கு சென்ற கால்நடைத்துறையினர் டில்லி பாபுவை சமாதானப்படுத்தி ஆட்டை பலியிட வேண்டாம் என அறிவுறுத்தினர். இதனால் தனது முடிவில் இருந்து இறங்கி வந்த டில்லி பாபு மகளின் ஆசைக்கிணங்க வெள்ளாட்டை கோவிலுக்கு அறுத்து பலியிடப்போவதில்லை என உறுதியளித்தார். சாதுர்யமாக செயல்பட்டு தனது வளர்ப்பு ஆட்டை காப்பாற்றிய மாணவி மகேஸ்வரியின் செயலை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

இதையும் படிங்க.!