Tamil Reader

COVID-19: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதி – தமிழக அரசு அறிவிப்பு..!

COVID-19 Confirmed cases in Tamil Nadu

தமிழகம் முழுவதும் COVID-19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 309 பேர் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கொரோனா வைரஸ் நோய் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பிரிவு 62 இன் கீழ் பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரிவு 76-இன்படி தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை நோய் சட்டம், 1897-இன் படி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

சட்டம் சொல்வது என்ன?

அரசு/தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முதலான இடங்களில் பணிபுரிபவர்கள், மாணவ மாணவியர் மற்றும் வருகை புரிபவர்களின் எண்ணிக்கைக்கேற்ப தேவையான அளவு தண்ணீர் குழாய்கள் மற்றும் வாஷ்பேசின்கள், திரவ சோப்பு கரைசல் அல்லது கை கழுவும் சோப்பு வைக்கப்பட வேண்டும்.

அரசு, தனியார் மருத்துவமனைகள் அவ்வப்போது முழுவதுமாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து நோய்த் தொற்று ஏற்படாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும்.

நோய்த் தொற்று நடவடிக்கைகள் எடுக்கத் தவறும் மருத்துவமனைகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த பொது அறிவிப்பானது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, கொள்ளை நோய் சட்டம் 1897-இன் கீழ் கொடுக்கப்படுகிறது.

தண்டனை

அறிவுரைகளை கடைப்பிடிக்க தவறுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939 மற்றும் கொள்ளை நோய் சட்டம் 1897-இன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 188-இன் கீழ் ஆறு மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இந்த பொது அறிவிப்பு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எழுத்து மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மற்ற சில பதிவுகள்