ஷார்ஜாவில் கொத்தடிமையாக வேலை செய்யும் தனது மகனை மீட்டுத் தரக்கோரி, அவரின் பெற்றோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் அரவிந்த். இவர் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு திருச்சியைச் சேர்ந்த ஜான் என்ற ஏஜென்ட் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்காக சென்றுள்ளார்.
அமீரக நாட்டில் ஷார்ஜாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் இவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், ஒரு வருடத்திற்கு மேலாக சரிவர அவருக்கு சம்பளம் வழங்காமல் தொடர்ந்து வேலை வாங்கி வருவதோடு, கொத்தடிமை போல நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அரவிந்த் தனது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரின் பெற்றோர்கள் புகார் மனு அளித்தனர்.
அதில், ஷார்ஜாவில் கொத்தடிமையாக பணிபுரிந்து வரும் தனது மகனை மீட்டு தரக்கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு கொடுத்து இருப்பதாகவும் தனது மகனை மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source: Puthiya thalaimurai (Tamilnadu Media)