Tamil Reader

“எங்களுக்குக் கண்பார்வை கிடையாது.. சாப்பிட ஏதும் கிடைக்குமா சார்” – சென்னை காவல்துறைக்கு போன்செய்த பார்வையிழந்த பெண் – காய்கறி, மளிகைப் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்கிய இன்ஸ்பெக்டர்..!

CHENNAI Police

இந்த உலகம் அதன் அச்சில் சுழல என்றும் காரணமாக இருப்பது சக மனிதர்களிடையே கருணையையும் அன்பையும் வழங்கும் மனிதர்களின் வாழ்க்கை தான். சில இக்கட்டான சூழலின் போதும் இத்தகைய மகத்தான மனிதர்களின் தரிசனத்தை இப்பூமியால் கண்டுணர முடியும். அப்படியானவர்களில் ஒருவர் தான் சென்னையில் அண்ணாநகர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்துவரும் மாதேஸ்வரன்.

சில நாட்களுக்கு முன்னர், சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன்கால் வந்திருக்கிறது. மறுமுனையில் பேசிய அம்மு (38) கூறிய வார்த்தைகளைக் கேட்டு அதிகாரிகள் கலங்கிப்போயினர்.

கண்பார்வையற்ற தம்பதியான அம்மு(38) – சிவா (40) ரயில்களில் மிட்டாய் விற்று தினந்தோறும் கிடைக்கும் 200 ரூபாயைக்கொண்டு தங்களது குடும்பத்தை நடத்திவருகின்றனர். இவர்களுக்கு சலோமியா என்னும் மகள் இருக்கிறாள். கொரோனா காலம் என்பதால் வேலைக்குச் செல்ல முடியாத சூழ்நிலை. மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்ற சிவாவினால் ஊர் திரும்ப முடியவில்லை. இதனால் மகளுடன் தனியாக சென்னையில் சிக்கிக்கொண்டார் அம்மு.

ஊரடங்கு, கட்டுப்பாடு, கடையடைப்பு எல்லாம் பசித்த வயிறுகளுக்குத் தெரிவதில்லை. கையில் இருந்த காசனைத்தும் செலவான பின்பும் அந்தப் பிஞ்சின் வயிறுக்கு பசிக்கத் தெரிந்திருக்கிறது. அக்கம் பக்கத்தினர் உதவியினால் பிழைத்துவந்த அம்மு, அருகில் வசிப்பவர் கூறிய அறிவுரையின்படி சென்னை காவல்துறையை போன் மூலமாகத் தொடர்புகொண்டு உதவி கேட்டிருக்கிறார்.

குழந்தையினை வைத்துக்கொண்டு சிரமப்படுவதாகவும் ஏதாவது உதவி செய்யும்படியும் அம்மு கேட்ட சில மணிநேரங்களில் மாதேஸ்வரன் ஒரு மாதத்திற்கு தேவையான காய்கறி, மளிகைப் பொருட்களை வாங்கிக்கொண்டு நேரடியாக அம்முவின் வீட்டிற்கே சென்று அளித்திருக்கிறார்.

தன்னுடைய கோரிக்கையை ஏற்று உதவி செய்த காவல்துறைக்கு நன்றி தெரிவித்த அம்மு,”நான் எதிர்ப்பார்த்திடாத அளவு பொருட்களை வழங்கியிருக்கிறார்கள். அதையும் இன்ஸ்பெக்டரே வந்து கொடுத்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது” என்றார்.

மாற்றுத் திறனாளிப் பெண்ணின் கோரிக்கையை ஏற்று உடனடியாக உதவிய இன்ஸ்பெக்டருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன.

இதையும் படிங்க.!