Tamil Reader

ஏன் ஒரு மாதிரியாக நடக்கிறீர்கள்? காலில் என்ன கட்டு? – 1.8 கிலோ தங்கத்தை காலில் கட்டிவந்த ஆசாமி கைது – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

31-smuggling

“இன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் ஒருவர் தங்கத்தைக் கடத்திவருகிறார்” இதுதான் சென்னை விமான நிலையத்தின் சுங்கத்துறை கமிஷனராக இருக்கும் ராஜன் சவுத்ரிக்கு கிடைத்த இரகசிய தகவல். உடனடியாக அனைத்து அதிகாரிகளுக்கும் கட்டளைகள் பறந்தன. கவனமாக இருங்கள் என எச்சரிக்கும் போது அதேவேளையில் விமானமும் தரையிறங்கியது.

தலைமுதல் உள்ளங்கால் வரை அனைவரையும் பரிசோதனை செய்துவிட்டார்கள். ஆனாலும் உருப்படியாக ஒன்றுமே கிடைக்கவில்லை என அதிகாரி ஒருவர் சொல்லும்போது துபாயில் இருந்து வந்த பயணி ஒருவர் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதாக சக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த  முகமது அஸ்ரப் (21) என்னும் அந்தப் பயணியின் உடைமைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன. ஆனாலும் ஏதும் கிடைக்கவில்லை. சரி நீங்கள் கிளம்புங்கள் என்றதும் அவ்விடத்தைவிட்டு நடந்துசென்ற அஸ்ரப்பின் நடையில் சந்தேகம் ஏற்படவே, ஏன்? ஒருமாதிரியாக நடக்கிறீர்கள்? என அதிகாரிகள் கேட்டிருக்கின்றனர்.

காலில் அடிபட்டிருப்பதாக அஸ்ரப் சொல்ல, அங்கேதான் அவர் சிக்கிக்கொண்டார். அடிபட்ட இடத்தைக் காண்பிக்கும்படி அதிகாரிகள் சொல்ல, கட்டுக் கட்டியிருக்கும் இடத்தை அதிகாரிகளிடம் அஸ்ரப் காட்டியிருக்கிறார். உடனடியாக கட்டை அதிகாரி ஒருவர் பிரிக்க உள்ளே இருந்த 1.8 கிலோ தங்கம் வெளியே எட்டிப் பார்த்திருக்கிறது. இதன்மதிப்பு ரூ. 89 லட்சத்து 17 ஆயிரம் ஆகும்.

அடுத்தடுத்து நடந்த விசாரணையில், துபாய் விமான நிலையத்தில் தங்கக்கடத்தல் கும்பல் ஒன்று காலில் இந்தக் கட்டை கட்டிவிட்டதாகவும் விமான நிலையத்தின் வெளியில் ஆட்கள் வந்து வாங்கிக்கொள்வார்கள் என்றும் தன்னிடம் சொல்லப்பட்டதாக அஸ்ரப் தெரிவித்தார்.

மாஸ்டர் பிளான் போட்ட அதிகாரிகள், அஸ்ரப்புடன் விமான நிலையத்திற்கு வெளியே வந்தனர். அப்போது தங்கத்திற்காக காத்திருந்த முகமது இப்ராகீம்(39) என்பவரும் தொக்காக மாட்டிக்கொண்டார். இருவரும் கைதுசெய்யப்பட்டு மேற்கட்ட விசாரணைகளை சுங்கத்துறை மேற்கொண்டுவருகிறது.

இதையும் படிங்க.!