Tamil Reader

துபாயிலிருந்து சென்னைக்கு மண்டைக்குள் வைத்து கடத்திவரப்பட்ட கிலோ கணக்கிலான தங்கம் – விமான நிலையத்தில் 11 மண்டைகள் சிக்கின..!

hair

நேற்று சென்னை விமான நிலையத்தில் நூதன முறையில் துபாய் மற்றும் ஷார்ஜாவிலிருந்து தங்கத்தை கடத்திவந்த 11 பேரை சுங்கத்துறை கைது செய்திருக்கிறது. 5.5 கிலோ தங்கத்தை மண்டைக்குள் வைத்து கொண்டுவந்த இவர்கள் சென்னை, திருச்சி, இராமநாதபுரம், விழுப்புரம் மற்றும் சேலம் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டை வீக்கம்

துபாயில் இருந்து ஃப்ளை துபாய் விமானம் மூலமாக சென்னைக்கு வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இருவர் மண்டையும் சற்றே வித்தியாசமாக வீங்கியிருப்பதை சுங்கத்துறை அதிகாரிகள் கவனித்திருக்கிறார்கள். கொஞ்சம் வாங்க ராஜா.. என அழைத்துச்சென்று தலைமுடியை இழுத்துப் பார்த்ததில் அது கையோடு வந்திருக்கிறது.

தங்கத்தை உருக்கி பேஸ்ட்டாக பிளாஸ்டிக் கவருக்குள் வைத்து அதை மண்டையில் ஒட்டியிருக்கிறார்கள் இந்த ஜிகிடி கில்லாடிகள். முதல் மண்டைக்குள் 698 கிராமும் இரண்டாவது மண்டைக்குள் 599 கிராம் தங்கமும் இருந்திருக்கிறது.

இதேபோல, திருச்சியைச் சேர்ந்த பாலு கணேசன் என்பவரும் இதே டெக்னிக்கில் 622 கிராம் தங்கத்தை எடுத்துவந்திருக்கிறார். அவரது தலையும் ஆராயப்பட்டிருக்கிறது. இப்படியெல்லாம் செய்தால் பிடிபடுவோம் என உள்ளாடைக்குள் வைத்து 62 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது அண்டர்வியரும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதாவது, அதற்குள் இருந்த தங்கம்.

இந்த சீட்டிங் சாம்பியன் கால் சாக்ஸில் வைத்து கடத்திவந்த 1.5 கிலோ தங்கமும் பிடிபட்டிருக்கிறது. இதேபோல, ஷார்ஜாவிலிருந்து சென்னை வந்த தமிம் அன்சாரி, சையத் அமீதுல்லா, சந்தோஷ் செல்வம் உள்ளிட்ட மேலும் இரண்டு பேர் இதே பாணியில் தங்கம் கடத்திவந்திருக்கின்றனர்.

1 கோடி மதிப்புள்ள 2.8 கிலோ தங்கத்தை இவர்கள் தலையில் தாங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர்களிடம் 4750 டாலர்ஸ், 650 திர்ஹம்ஸ் என வெளிநாட்டுப்பணமும் இருந்திருக்கிறது. இந்தப் பணத்தின் மதிப்பு 24 லட்சம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இப்படியாக சென்னை விமான நிலையமே நேற்று அல்லோலகல்லோலப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க.!