Tamil Reader

சிரிப்பதை நிறுத்திக்கொண்ட சின்னக்கலைவாணர் – பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்..!

vivek-2-

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான திரு.விவேக் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். அவருக்கு வயது 59. நேற்று, சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் மயங்கி விழுந்த அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் அவரது குடும்பத்தார்.

அங்கே அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் எக்மோ சிகிச்சைக்கும் அவர் உட்படுத்தப்பட்டிருக்கிறார். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்திருக்கிறது. இதனையடுத்து அவரது உடல் வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு பொதுமக்கள், நடிகர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டிருக்கிறது. மேட்டுக்குப்பத்தில் உள்ள மயானத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முந்தைய நாள் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை சிரிக்க வைத்த சின்னக்கலைவாணர் விவேக் முதன்முறையாக அனைவரையும் அழ வைத்திருக்கிறார். நடிகர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் நடிகர் விவேக்கின் மறைவுச் செய்திகேட்டு இரங்கல் தெரிவித்துவருகிறார்கள். சமூக வலைத்தளம் எங்கிலும் விவேக் அவர்களின் புகைப்படமும், அஞ்சலிக்குறிப்புமே தென்படுகிறது.

அவர் விதைத்த லட்சக்கணக்கான மரங்களின் மூலமாக அவர் என்றும் உயிர்த்திருப்பார். எங்களது ஆசிரியர் குழு நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது.

இதையும் படிங்க.!