Tamil Reader

டி20 கேப்டன்சியில் இருந்து விலகுகிறார் விராட் கோலி – ரசிகர்கள் அதிர்ச்சி!

2017ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட்டின் அனைத்து விதமான ஃபார்மட்களிலும் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அக்டோபர் மாதம் துபாயில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில், உலகக்கோப்பைக்கு பின் டி20 கேப்டன்சி பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி ட்விட்டரில் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

Image

இது குறித்து அவர் கூறியதாவது:

“அக்டோபர் மாதம் துபாயில் நடக்கும் டி20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு, டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். பயிற்சியாளர் ரவி பாய் மற்றும் ரோகித் சர்மாவுடன் ஆலோசித்த பிறகே இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, தலைவர் கங்குலி ஆகியோரிடமும் பேசினேன்.

நான் இந்திய கிரிக்கெட் அணிக்கும், இந்திய அணிக்கும் சிறந்த முறையில் சேவை செய்வேன். கடந்த 8-9 ஆண்டுகளாக 20 ஓவர், ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறேன். கடந்த 5-6 ஆண்டுகளாகத் தொடர்ந்து கேப்டனாக இருந்து வருகிறேன். எனது பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறேன்

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்த முழுமையாகத் தயாராக இருக்க எனக்கு இடம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் 20 ஓவர் கேப்டனாக இருந்த காலத்தில் அணிக்குச் சிறப்பாகச் செயல்பட்டேன். 20 ஓவர் அணிக்காகத் தொடர்ந்து பேட்ஸ்மேனாகச் சிறப்பாக விளையாடுவேன்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக எனது பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. அணியின் வீரர்கள், பயிற்சியாளர், பிற பணியாளர்கள், ரசிகர்கள் அனைவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்”

இவ்வாறு விராட் கோலி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது முடிவுக்கு ரசிகர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் எதிர்காலம் சிறக்க வாழ்த்துவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி குறிப்பிட்டுள்ளார்

 

இதையும் படிங்க.!