Tamil Reader

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வெள்ளி வென்ற தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன்!

 

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் உயரம் தாண்டுதலில் டி 63 பிரிவில் தங்கப் பதக்கத்தை வெல்வதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பனுக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த சாம் கிரீவ் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் 1.86 மீட்டர் உயரத்தை தாண்டிவிட்டனர். அடுத்து 1.88 மீட்டர் உயரத்தை தாண்டும்போது, மாரியப்பன் சறுக்கிவிட்டார். ஆனால், சாம் கிரீவ் அந்த இலக்கை நேர்த்தியாக கடந்து தங்கம் வென்றார். இதனால், மாரியப்பனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. பீஹாரைச் சேர்ந்த ஷரத் குமார், 1.83 மீட்டர் உயரத்தைத் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

Tokyo Paralympics: Sharad Kumar raises the bar and jumps above obstacles to  seek glory
ஷரத் குமார்

இதன்மூலம் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்தன. 2016 ரியோ பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் மாரியப்பன், சாம் இடையே கடும் போட்டி நிலவியது. அன்று மாரியப்பன் முதலிடத்தையும், சாம் இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தனர். இது தவிர, எஸ்.எச்.1 வகை ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவிலிருந்து 3 வீரர்கள் கலந்துகொண்டனர். அதில் சிங்ராஜ் அதானா மற்றும் மனிஷ் நார்வால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். திபேந்தர் சிங் தகுதிப்போட்டியிலேயே தோல்வியைத் தழுவினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மனீஷ் நார்வால், இறுதிப் போட்டியில் சோபிக்க முடியாமல் 135.8 புள்ளிகளையே சேர்த்து 7-ம் இடத்தைப் பிடித்தார். அதேசமயம் சிங்ராஜ் அதானா மொத்தம் 216.8 புள்ளிகளைக் குவித்து, 3-ம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இதையும் படிங்க.!