Tamil Reader

துபாய் வந்தடைந்த CSK வின் முக்கியமான 2 வீரர்கள் – சந்தோஷத்தில் ரசிகர்கள்..!

CSK

இந்த வருடத்திற்கான IPL போட்டிகள் அமீரகத்தில் நடப்பதையொட்டி அனைத்து அணியினரும் அமீரகம் வந்துவிட்டனர். நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் மற்றும் கரீபியன் லீக் ஆகிய காரணத்தினால் சில முக்கிய வீரர்கள் இன்னும் அமீரகம் திரும்பவில்லை. தற்போது கரீபியன் லீக் நிறைவடைந்ததை முன்னிட்டு அமீரகம் திரும்பும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

CSK வில் இணைந்த ஸ்பின் இரட்டையர்கள்

நடப்பு IPL தொடரில் இருந்து CSK வின் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் விலகியிருப்பது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருந்தாலும் அதனை மறக்கச் செய்யும் விதமாக அணியில் இணைந்திருக்கிறார்கள் மிட்சல் சான்ட்னர் மற்றும் இம்ரான் தாஹீர்.

நியூசிலாந்தைச் சேர்ந்த சான்ட்னர் ஸ்பின்னர் தான் என்றாலும் அவ்வப்போது சிக்ஸர்களைத் தெறிக்கவிடும் ஆற்றல் படைத்தவர். அதேபோல, பிரபல “ஓடுனரான” தாஹீரின் சுழலில் பேட்டிங் ஜாம்பவான்களும் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பதை நாம் கடந்த சீசனிலேயே பார்த்திருக்கறோம். ஆகவே, இந்த ஸ்பின்னர் இரட்டையர்களின் வருகை CSK ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தஞ்சமடைந்தேன் அன்பு இல்லத்தில்

தமிழில் ட்வீட் போட்டு அவ்வப்போது ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு எடுத்துச்செல்வது CSK வீரர்களின் வாடிக்கை. அதிலும், இம்ரான் தாஹீர் வேற லெவல் ட்வீட்டுகளை தட்டி வீசக்கூடியவர். தற்போது துபாய் திரும்பியிருக்கும் தாஹீர், வந்ததும் வராததுமாக ஒரு ட்வீட்டை வழக்கம்போல போட தற்போது அது வைரலாகி வருகிறது.

“என் இனிய தமிழ் மக்களே, தஞ்சமடைந்தேன் அன்பு இல்லத்தில் (துபாய்). போட்டிகள் துவங்க ஒரு வாரமே இருக்கும் இந்த தருவாயில் நாங்கள் வேட்டைக்குத் தயார். அதைக்காண நீங்கள் தயாரா? எட்றா வண்டிய.. போட்றா விசில” இதுதான் தாஹீர் போட்ட ட்வீட்.

தாஹீர் மற்றும் சான்ட்னர் ஆகியோரின் வருகையினால் ட்விட்டர் பக்கம் “மஞ்சள் கடல்” அலையடிக்கத் தொடங்கியிருக்கிறது.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!