Tamil Reader

சொந்த மண்ணில் சறுக்கிய இங்கிலாந்து – 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவலில் வரலாறு படைத்த இந்தியா!

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்தின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சதம் விளாசி மிரட்டினார்.

Image

தனது பங்கிற்கு சிறப்பாக ஆடிய புஜாரா 61 ரன்கள் எடுத்தார். கோலி 44, பண்ட் 50, ஷர்துல் தாக்கூர் 60 ரன்கள் என அனைவரும் தங்கள் பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் மூலம் இந்திய அணி 466 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 368 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. 2வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது.வெற்றிக்கு இன்னும் 291 ரன்கள் தேவை என்ற நிலையில் 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இங்கிலாந்து துவக்க வீரர்கள் ஹசீப் ஹமீத் மற்றும் ரோரி பர்ன்ஸ் சிறப்பாக விளையாடினர். இரு வீரர்களும் அரைசதம் விளாசினர்.
50 ரன்கள் எடுத்திருந்த ரோரி பர்ன்ஸ் இந்திய வீரர் ஷர்துல் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த டேவிட் மலான் 5 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகி வெளியேறினார். சற்று நிலைத்து நின்ற ஹசீப் ஹமீத் 63 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த இங்கிலாந்து வீரர்கள் போப் 2 ரன்னிலும், பேர்ஸ்டோ மற்றும் மொயீன் அலி டக் அவுட்டாகி நடையை கட்டினர்.

Image

சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஜோ ரூட் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷர்துல் தாக்குர் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த இங்கிலாந்து வீரர்கள் இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தனர்.இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இங்கிலாந்தை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

Imageஇந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளும் மோதும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி மேன்செஸ்டரில் நடைபெற உள்ளது. 1971க்குப் பிறகு 50 ஆண்டுகள் கழித்து ஓவல் மைதானத்தில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!