Tamil Reader

வீடியோ: “அம்மா இறந்துவிடுவார்” என காவல்துறை அதிகாரியின் காலில் விழுந்து மன்றாடிய மகன் – VIP நபரின் சிகிச்சைக்காக ஆக்சிஜன் சிலிண்டரை தூக்கிச்சென்ற காவல்துறை..!

oxygen cylinder

உத்திரப் பிரதேசத்தில் VIP நபர் ஒருவரின் சிகிச்சைக்காக மூச்சுத் திணறலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவந்த பெண் ஒருவரின் ஆக்சிஜன் சிலிண்டரை காவல்துறை அதிகாரிகள் தூக்கிச்சென்றுள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் சோகம் என்னவென்றால் அடுத்த சில மணிநேரங்களில் மூச்சுத்திணறி அந்தப் பெண் உயிரிழந்திருக்கிறார்.

53 வயதான உஷா கோயல் தனக்கு மூச்சுத்திணறல் இருப்பதாக உத்திரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதால், உஷாவின் மகனான அன்மோல் கோயலிடம் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கிவருமாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

பல மணிநேர தேடலுக்குப் பிறகு ஆக்சிஜன் சிலிண்டருடன் திரும்பியிருக்கிறார் அன்மோல். ஒருவழியாக அவரது தாய்க்கு மூச்சு சீரானது. ஆனால் அது வெகுநேரம் நீடிக்கவில்லை. திடீரென அங்குவந்த காவல்துறை அதிகாரிகள், அங்கிருந்த உஷாவின் ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்ல முயற்சித்திருக்கின்றனர்.

இதனையறிந்த அன்மோல், காவல்துறையினரின் காலில் விழுந்து மன்றாடியிருக்கிறார். “அதனை எடுத்துச் சென்றுவிட்டால் என் அம்மா இறந்துவிடுவார். தயவு செய்து கொடுத்துவிடுங்கள்” என அன்மோல் கெஞ்சிக்கொண்டிருக்கும்போதே வாகனம் சிலிண்டரோடு புறப்பட்டுச் சென்றுவிட்டது.

எதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என எங்கிருந்த பணியாளர் ஒருவரிடம் அன்மோல் கேட்க, VIP நபர் ஒருவருக்கு அவசர தேவைக்காக அந்த சிலிண்டர் எடுத்துச் செல்லப்படுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

அப்படியென்றால் என் அம்மாவின் உயிர் முக்கியமில்லையா? என கோபத்தில் கத்தியிருக்கிறார் அன்மோல். ஆனால் அவருக்கு யாரும் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆக்சிஜன் சிலிண்டரின் ரெகுலேட்டர் வாங்கச் சென்ற அன்மோலின் தம்பி அனீஸ் மருத்துவமனைக்கு வந்து விஷயத்தைக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.

இருவரும் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தும் மருத்துவமனை அவர்களுக்கு உதவி செய்யவில்லை. இதனால் அடுத்த 2 மணிநேரத்தில் உஷா மரணமடைந்திருக்கிறார். இதனை ஆக்ரா காவல்துறை முற்றிலுமாக மறுத்துள்ளது.

காலியான சிலிண்டரை நிரப்புவதற்காகவே நாங்கள் எடுத்துச் சென்றோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அன்மோல் காவல்துறை அதிகாரியின் காலில் விழுந்து மன்றாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க.!