இந்தியாவில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில், மிக முக்கிய நடவடிக்கையாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு முடிவுக்கு வர இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். காணொலி மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான மத்திய – மாநில அரசுகளின் முயற்சிகள் எத்தகைய பலன்களை அளித்துள்ளன என்பது குறித்தும், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.
இந்த ஆலோசனையை அடுத்து, இந்தியாவில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கடந்த 2ம் தேதியும், 11ம் தேதியும் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
Source: News7 Tamil