பஞ்சாப்பின் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்னம் சிங். 29 வயதாகும் சத்னம் சிங் கடந்த இரண்டு வருடகாலமாக அபுதாபியில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பிளம்பராகப் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் முடிவெடுத்திருக்கிறார்கள். இதனையடுத்து, சொந்தவூர் திரும்பியிருக்கிறார் சத்னம்.
அப்போதுதான் விவசாயிகள் போராட்டம் எந்தளவிற்கு தீவிரமடைந்திருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார். சத்னமின் தாய்க்கு (70) கண்பார்வைக் குறைவு என்பதாலும் அவரது தந்தைக்கு வயதாகிவிட்டபடியாலும் அவரது வயல்கள் பராமரிப்பின்றி கிடந்திருக்கிறது. போராட்டத்தில் கலந்துகொள்ளும் அளவிற்கு சத்னமின் பெற்றோரின் உடலில் வலு இருக்கவில்லை. அதனால் தானே போராட்டக் களத்திற்குச் செல்ல முடிவெடுத்திருக்கிறார்.
தனக்காக ஒரு இருசக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு, பஞ்சாப் – ஹரியான பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ள சத்னம் கிளம்பிச் சென்றிருக்கிறார்.
2 நாட்கள்..
வெளிநாட்டிலிருந்து ஆசையுடன் வீடுதிரும்பிய சத்னம் வெறும் 2 நாட்கள் மட்டுமே தனது பெற்றோருடன் இருந்திருக்கிறார். தான் போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக சத்னம் தெரிவிக்கும் போதும் அவரது பெற்றோர் அவரைத் தடுக்கவில்லை.
போராட்டம் பற்றியும் வேலை பற்றியும் சத்னம் பேசுகையில்,” நான் 2 மாத விடுப்பில் வந்திருக்கிறேன். எனக்கு வரன் பார்க்கும் முடிவில் எனது பெற்றோர் இருக்கிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் விட இந்த நிலம் முக்கியம். விவசாயம் முக்கியம். வெளிநாடு செல்வதற்கு முன்பு நானும் விவசாயியாகவே இருந்தேன். அதனால் ஒருபோதும் என்னால் விவசாயத்தை விட்டுக்கொடுக்க முடியாது. போராட்டம் ஓயும் வரையில், வேளாண் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் நான் வெளிநாடு திரும்பமாட்டேன். வேலையும் திருமணமும் விவசாயத்தைவிட முக்கியமானதல்ல” என்றார்.