Tamil Reader

அமீரகம் – இந்தியாவுக்கு இடையிலான விமான சேவைகள் விரைவில்?

Air India Express Flight

இந்தியாவில் சிக்கித்தவிக்கும் அமீரகவாசிகளை அழைத்து வர நடவடிக்கை.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று வார லாக்டவுன் காலம் நிறைவடைந்ததும், அமீரகம் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பயணிகள் விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய சிவில் ஏவியேஷன் அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 14ம் தேதி நிறைவடையவுள்ள லாக்டவுன் காலத்திற்குப் பிறகே, வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என சிவில் ஏவியேஷன் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டார்.

எந்தெந்த நாட்டுக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது என்ற முடிவும் லாக்டவுன் காலம் முடிவடைந்த பிறகே, தனித்தனியாக ஆராயப்பட்டு அமல்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மார்ச் 22ம் தேதி முதல் இந்தியா அனைத்து பயணிகள் போக்குவரத்து விமான சேவைகளும் காலவரையறையின்றி தடைசெய்யப்பட்ட நிலையில் அமைச்சர் இன்றைய தினம் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் லாக்டவுன் காலம் நிறைவடைந்த பிறகு, விமான சேவைகள் ஆரம்பிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பினை அளித்துள்ளது.

இந்தியா முழுவதற்குமான லாக்டவுன் அமல்படுத்தப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, சர்வதேச விமான சேவைகள் அனைத்திற்கும் இந்திய சிவில் ஏவியேஷன் அமைச்சகம் தடை விதித்திருந்தது. சர்வதேச பயணிகளின் வருகை மூலமே கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகிறது என கருதப்பட்ட நிலையில், நாடளாவிய லாக்டவுன் தளர்த்தப்பட்ட பின்னர் சர்வதேச விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமா என இதுவரை உறுதியளிக்கப்படவில்லை.

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படாத பட்சத்தில் இந்திய சுகாதார அமைப்பு எந்தெந்த நாடுகளுக்கான விமான சேவைகள் பாதுகாப்பானவை என ஆராய்ந்து, அதன்படி ஏப்ரல் 15ம் தேதி முதல் பயணிகள் விமான சேவைகளை ஆரம்பிக்க யோசித்து முடிவு எடுக்கப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து செயலாளர் PS கரோலா குறிப்பிட்டார்.

இதேவேளை ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் பன்சால் குறிப்பிடுகையில் சர்வதேச விமான சேவைகள் தடைசெய்யப்பட்ட காரணத்தினால் இந்தியாவில் தவிக்கும் வெளிநாட்டவர்களை திருப்பி அனுப்பும் வகையில் 18 விமான சேவைகள் விரைவில் செயற்படுத்தப்படும் என்றார்.

விமானப் போக்குவரத்து தடை காரணமாக இந்தியாவில் ஏராளமான வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளின் பிரஜைகள் பலர் தவிக்கும் நிலையில், ஏர் இந்தியா மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளின் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டால், அடுத்த சில நாட்களில் இவர்களால் வீடு திரும்ப முடியும்.

இவ்வாறு வெளிநாட்டு பயணிகளை ஏற்றிச்செல்லவிருக்கும் விமான சேவைகள், தமது குடிமக்களை மீட்டுச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதுடன், இந்த விமானங்கள் இந்தியாவுக்கு வரும் வேளையில் பயணிகளை ஏற்றி வரவோ, சரக்குகளை கொண்டு வரவோ அனுமதிக்கப்படாது என பன்சால் மேலும் தெரிவித்தார்.

லாக்டவுன் காலப்பகுதியிலும் சில வளைகுடா விமான சேவைகள் இந்தியா -வளைகுடா நாடுகளுக்கு இடையில் சரக்குப் போக்குவரத்து விமான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று வீடியோ கான்பிரன்ஸிங் முறையில் காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்ட வேளையில், ஏப்ரல் 14ம் தேதி முதல் கட்டம் கட்டமாக முடிவுக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த நாடளாவிய லாக்டவுன் நடவடிக்கையானது, கொரோனா வைரஸ் தீவிரமாக பரவாமலிருக்க உதவிசெய்துள்ளது. மற்ற நாடுகளில் இரண்டாவது முறையாக கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் பரவல் கட்டுப்பாட்டு நடைமுறைகள் திருப்தியை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!