Tamil Reader

அமீரகத்தை சேர்ந்த பிரபல இந்திய தொழிலதிபர் டெல்லியில் கைது.!

C.C.Thambi

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த NRI தொழிலதிபர் சி.சி.தம்பியை இந்தியாவின் புது தில்லியில் அமலாக்க இயக்குநரகம் (ED) கைது செய்துள்ளது. மேலும் அந்நிய செலாவணி ரூ.10 பில்லியனுக்கும் அதிகமான மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில் 1.9 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்புள்ள பண மோசடி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ராவுக்கு எதிரான விசாரணையின் பின்னணியில் ED, கடந்த வெள்ளிக்கிழமை (January 17 2020) மாலை இவரை (சி.சி.தம்பியை) கைது செய்துள்ளது. மேலும் தம்பியை சிறப்பு சிபிஐ நீதிபதி அரவிந்த்குமார், மூன்று நாட்கள் ED-யின் காவலில் வைக்குமாறு சனிக்கிழமை மாலை அனுப்பினார்.

முன்னதாக இந்திய தொழிலதிபர் வாத்ரா மற்றும் தப்பியோடிய ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி ஆகியோருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, கேரளாவைச் சேர்ந்த இவரை விசாரிப்பதற்காக, கடந்த காலங்களில் பலமுறை மத்திய நிறுவனத்தால் வரவழைக்கப்பட்டதாக, பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (பி.டி.ஐ) (Press Trust of India (PTI)) தெரிவித்துள்ளது.

அமீரகத்தில் அவருடைய வணிகங்கள்:

இவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் வியாபாரம் உட்பட பல வணிகங்கள் உள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதுமட்டுமின்றி பிரபல கேரள உணவு உணவக சங்கிலி நளுகேட்டுவின் (Nalukettu) உரிமையாளரும் இவர் ஆவார்.

இந்த பெரும் தொழிலதிபருக்கு நெருக்கமான ஒரு வட்டாரம், அமீரக ஊடகமான கலீஜ் டைம்ஸிடம் , “அவர் இப்போது பல மாதங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இல்லை. இருப்பினும், அவருக்கு எதிரான பிரச்சினைகள் சுமார் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.” என்று கூறினர். மேலும் இதனால் வியாபாரத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. வழக்கம்போல வியாபாரம் தொடரும் என்று அஜ்மானில் உள்ள நலுக்கேட்டு உணவகத்தின் ஊழியர்கள் தெரிவித்தனர்.

தம்பியின் வரலாறு:

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் இருந்து வந்த தம்பி, 1980 களில் மத்திய கிழக்கில் இறங்கிய பின்னர் அவரது வாழ்க்கை சிறப்பாக மாறியது.

கிடைக்கும் வேலைகளைச் செய்வதன் மூலம் தொடங்கி, தனது சொந்த தொழிலை அமீரகத்தில் அமைத்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனது வணிகத் தளத்திலிருந்து ஆரம்பமாகி, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலத்திற்குப் பிறகு, இப்போது கல்வி நிறுவனங்கள், ரிசார்ட்ஸ், டிஸ்டில்லரிகள் மற்றும் ரியல் எஸ்டேட் வரையிலான பல்வேறு துறைகளிலும், வளைகுடா நாட்டிலும் மற்றும் வேறு சில நாட்டிலும் பல இடங்களில் தனது கால் பதித்திருக்கிறார்.

இன்று (ஜனவரி 21 ம் தேதி) தனது அமலாக்க இயக்குநரகம் ரிமாண்டின் (Enforcement Directorate remand) முடிவில், டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!