மத்தியில் ஆளும் பாஜக அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளிலிருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
இந்த சட்ட திருத்தம் “மதசார்பற்ற நாடு” என்ற இந்தியாவின் கொள்கையை இது குழிதோண்டி புதைக்கும் வண்ணம் உள்ளதாகவும், இது நாளை இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கே ஆபத்தாக மாறிவிடும் என்று பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள், பொதுமக்கள், அமைப்புகள், அரசியல் கட்சியினர் பெருந்திரள் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சட்டத்தை திரும்ப பெரும் வரை எங்களின் போராட்டம் ஓயப்போதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த சட்ட திருத்தத்தை பல வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் பொதுமக்களுக்கு வேறு விதமாக எடுத்துரைத்து பொதுமக்களை குழப்பி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு பொய்யான தகவல்களுக்கு தொடர்ந்து முற்றுப்புள்ளி வைக்கும் இணையதளமான “YouTurn.in” இதற்கான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த சட்டதிருத்தத்தை எதிர்த்து திரையுலக பிரபலங்கள் பலர் தங்களின் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும், மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றும் வருகின்றனர்.