Tamil Reader

இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களின் தடை மேலும் நீட்டிப்பு..! எப்பொழுது வரை.?

Air India Express Flight

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே ஜூன் 30 நள்ளிரவு வரை சர்வதேச பயணிகள் விமானங்களின் தற்காலிக இடைநிறுத்தம் தொடரும் என்று இந்திய சிவில் ஏவியேஷனின் விமான ஒழுங்கு முறை இயக்குனரகம் (Directorate General of Civil Aviation -DGCA) சனிக்கிழமை (நேற்று) தெரிவித்துள்ளது.

“வரும் ஜூன் 30 ஆம் தேதிவரை இந்தியாவிலிருந்து எந்தவிதமான சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்தும் இயங்காது என்றும், அவ்வாறு விமான சேவையை தொடங்கினால் அதற்குரிய வகையில் முன்கூட்டியே சர்வதேச விமான நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்” என்று சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான சேவைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இரண்டு மாத தடைக்கு பிறகு கடந்த திங்கள்கிழமையன்று உள்நாட்டு பயணிகள் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட போதிலும், சர்வதேச விமான சேவைகளுக்கான தடையில் தற்போது வரை எவ்வித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 8 முதல் நாட்டில் ‘அன்லாக் -1′(‘Unlock-1’) தொடங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது. இதன்படி கடந்த மார்ச் 25 ஆம் தேதியன்று அமலுக்கு வந்த நாடு தழுவிய ஊரடங்கானது பெருமளவில் தளர்த்தப்படுவதோடு, ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் மற்றும் வழிபாட்டு தளங்கள் போன்றவற்றை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் ஜூன் 30 வரை நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பயணிகள் விமானப் சேவையானது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருக்கும் இச்சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தின் தன்மையை தொடர்ந்து மதிப்பீடு செய்த பின்னரே சேவைகளை எப்போது மீண்டும் தொடங்குவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source: Khaleej Times


மற்ற சில பதிவுகள்