கொரோனா தடுப்புப் போரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இன்றுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், மீண்டும் அது நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று காலை காணொளி காட்சி மூலம் இந்திய நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், ஊரடங்கு உத்தரவு, மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து மே 3ஆம் தேதி வரை, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
“மே 3 ஆம் தேதி, இரவு 11:59 மணி வரை, அனைத்து விமான நிறுவனங்களின் விமான சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது,” என்று விமானப் போக்குவரத்துத் துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
தற்போது அமலில் உள்ள ஊரடங்கினால், விமானப் போக்குவரத்துத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல விமான நிறுவனங்கள், ஊதியம் கொடுக்காமல் தங்கள் ஊழியர்களை தற்காலிக விடுப்பில் அனுப்பியுள்ளது.
மீண்டும் விமான சேவை தொடங்கப்படும்போது, பயணச் சீட்டுகளின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.