Tamil Reader

COVID-19: விமான சேவைகள் ஏப்ரல் 30 வரை நிறுத்தம்..!

COVID-19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த கால அவகாசம் முடிவுக்கு வர இன்னும் ஒரு வாரகாலம் இருக்கும் நிலையில், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற யூகங்கள் ஒரு புறம் எழுந்துள்ளன, நவம்பர் வரை நீட்டிக்கப்படும் என்ற வதந்திகளும் சமூகவலைத்தளங்களில் பரவி வருவதை காணமுடிகிறது.

இந்நிலையில், வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை உள்நாட்டு, வெளிநாட்டு விமானப் போக்குவரத்து சேவைகளை நிறுத்திவைப்பதாக இண்டிகோ நிறுவனம் இன்று (ஏப்ரல் 8) அறிவித்துள்ளது.

இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எங்களது சேவைகள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகின்றன. உங்களது பணம் பாதுகாப்பாக உள்ளது” என்றும் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே ஏர் இந்தியா நிறுவனமும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை உள்நாட்டு, வெளிநாட்டு விமானப் போக்குவரத்து சேவைகளை நிறுத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துவிட்டதாக முழு நம்பிக்கை வந்த பிறகு விமானப் போக்குவரத்து மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.


மற்ற சில பதிவுகள்