Tamil Reader

நாடு திரும்பும் இந்தியர்களுக்கான குவாரண்டைன் குறித்த புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

NRI Indians

இந்திய சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் (The Ministry of Health and Family Welfare) இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பும் மக்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கான நிறுவனங்களில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். முதல் ஏழு நாட்களில் மக்கள் தங்களது சொந்த செலவில் தனிமைப்படுத்தலுக்கான நிறுவனங்களில் தங்கியிருக்க வேண்டும். அடுத்த ஏழு நாட்களில் மக்கள் தங்களது வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சகம் கொண்டுவந்துள்ள புதிய கொரோனா விதிமுறைகளை பயணிகள் நோய் பரவலைத் தடுக்கும் விதமாக பின்பற்றுவேன் என உறுதியளிக்க வேண்டுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

விதிவிலக்கான நபர்களான கர்ப்பிணிகள், மன அழுத்தம் உடையவர்கள், குடும்பங்களில் ஏற்பட்ட இறப்பு, தீவிர நோயாளிகள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளைக் கொண்டோர் 14 நாட்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

மேற்கண்ட சூழ்நிலையைச் சேர்ந்தவர்கள் இந்திய அரசின் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மாநிலங்களே வகுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புவோருக்கான விதிமுறைகள்

  1. வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பும் மக்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கான நிறுவனங்களில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வேன் எனவும், முதல் ஏழு நாட்களில்  தங்களது சொந்த செலவில் தனிமைப்படுத்தலுக்கான நிறுவனங்களில் தங்கியிருக்கவும், அடுத்த ஏழு நாட்களில் தங்களது வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வேன் என உறுதியளிக்க வேண்டும்.
  2. கர்ப்பிணிகள், மன அழுத்தம் உடையவர்கள், குடும்பங்களில் ஏற்பட்ட இறப்பு, தீவிர நோயாளிகள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளைக் கொண்டோர் 14 நாட்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் இவர்கள் இந்திய அரசின் ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்தவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  3. விமான டிக்கெட்டுடன் செய்ய வேண்டிய மற்றும் செய்யத் தகாத செயல்கள் குறித்த பட்டியலையும் சம்பத்தப்பட்ட முகவர்கள் அளிக்க வேண்டும்.
  4. அனைத்து விமானப் பயணிகளும் தங்களுடைய மொபைலில் ஆரோக்கிய சேது செயலியை தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
  5. விமானம் மற்றும் கப்பல் வழியாக பயணிக்க விண்ணப்பித்தவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்து அறிகுறிகள் இல்லையென்றால் மட்டுமே பிரயாணத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
  6. நிலவழி எல்லைகளைக் கடந்து இந்தியாவிற்குள் வரும் பிரயாணிகளுக்கும் வெப்ப பரிசோதனை செய்து அறிகுறிகள் இல்லையென்றால் மட்டுமே இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுவர்.
  7. பிரயாணிகள் தங்களது சுய உறுதிமொழிப் படிவத்தின் நகலை விமான/கப்பல்/நிலவழிப் போக்குவரத்து நிலையங்களில் உள்ள குடியேற்ற அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆரோக்கிய செய்து செயலியில் இந்த சுய உறுதிமொழிப் படிவம் கிடைக்கும்.
  8. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலையங்கள் மற்றும் விமானத்திற்குள் சுற்றுப்புற சுகாதாரத்தைப் பேணவும், கிருமிநாசினிகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  9. புறப்பாட்டின் போது அனைத்து விமான நிலையங்களிலும், மக்கள் போதிய சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும்.
  10. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகள் விமான/கப்பல் போக்குவரத்து நிலையங்களில் பயணத்தின்போது வழங்கப்படவேண்டும்.
  11. விமான/கப்பல் போக்குவரத்து நிலையங்களில் புறப்பாட்டின் போது முகக் கவச பயன்பாடு, மக்களின் சீரான சுவாசம், சுகாதாரமான கைகள், சுற்றுப்புற சுகாதாரம் ஆகியவை குறித்த பரிசோதனைகள் விமான/கப்பல் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பிரயாணிகளுக்கு மேற்கொள்ளப்படும்.
  12. வருகையின் போது அனைத்து பிரயாணிகளுக்கும் வெப்ப பரிசோதனையானது விமான/கப்பல்/நிலவழிப் போக்குவரத்து நிலையங்களில் உள்ள சுகாதார பணியாளர்களினால் மேற்கொள்ளப்படும்.
  13. வெப்ப பரிசோதனையின் போது கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் சுகாதார விதிமுறைகளின் அடிப்படையில் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படுவர்.
  14. எஞ்சியோர் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தலுக்கான நிறுவனங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
  15. தனிமைப்படுத்தலுக்கான நிறுவனங்களில் இருக்கும் பிரயாணிகள் https://www.mohfw.gov.in/pdf/Revisedtestingguidelines.pdf. என்னும் முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் ICMR ன் சுகாதார விதிமுறைகளின் அடிப்படையில் பரிசோதனை செய்யப்படுவர். பரிசோதனை முடிவுகள் பாசிட்டிவ் ஆக வந்தால் மேற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்படும்.
  • லேசான அறிகுறிகள் கொண்டோர் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளவோ, தனியார் மற்றும் பொது கொரோனா பாதுகாப்பு மையங்களில் தனிமைப்படுத்திக்கொள்ளவோ வேண்டும்.
  • மிதமான மற்றும் தீவிர அறிகுறிகள் இருப்பது தென்பட்டால் உடனடியாக கொரோனா சிறப்பு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

16. அறிகுறிகள் தென்படவில்லை எனில் வீட்டில் போதிய சுகாதாரத்துடன் தங்களை 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

17. அறிகுறிகள் அதிகமாவதாக உணர்ந்தால் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியிடம்   உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அல்லது மாநில அல்லது தேசிய உதவி மையத்திற்கு 1075 என்ற எண்ணிற்கு அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும்.


மற்ற சில பதிவுகள்