Tamil Reader

ஓய்வில்லாமல் அதிக நேர உழைப்பு, குறைவான ஊதியம் பெறும் இந்தியர்கள் : சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு..!

thequint_Reuters_Services

 

ஆசியா – பசிபிக் பகுதியில் அதிக நேர உழைப்பு, குறைவான ஊதியத்தைப் பெறும் மக்களைக்கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வங்கதேசம் முதலிடத்தில் உள்ளது.

வாரத்திற்கு இந்தியர்கள் 48 மணிநேரம் உழைப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகளவில் அதிக நேரம் பணிபுரியும் மக்களைக்கொண்ட நாடுகளின் பட்டியலில் காம்பியா, மங்கோலியா, மாலத்தீவுகள் மற்றும் கத்தார் ஆகியவை இந்தியாவிற்கு முன்னால் இடம்பெற்றுள்ளன.

இதில் சீனர்கள் 46 மணிநேரங்களும், ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்தவர்கள் 36 மணிநேரமும், அமெரிக்கர்கள் 37 மணிநேரங்களும், இஸ்ரேலியர்கள் 36 மணிநேரங்களும் சராசரியாக உழைப்பதாக அறிக்கையில் சுட்டப்பட்டுள்ளது.

சில துணை-சஹாரா ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர்த்து, ஒரு இந்தியத் தொழிலாளியின் குறைந்தபட்ச சட்டரீதியான ஊதியமும் உலகிலேயே மிகக் குறைவு என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தொழிலாளர்களிடையே, நல்ல ஊதியம் பெறும் தொழிலாளர்கள், சம்பளம் பெறும் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் தான் அதிகம் வேலை செய்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. நகர்ப்புறங்களில் சம்பளம் பெறும் தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் உள்ளவர்களை விட அதிகமாக வேலை செய்கிறார்கள். கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் பெண்களை விட ஆண்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்கள்.

கிராமப்புற இந்தியாவில், சுயதொழில் செய்யும் ஆண்கள் 48 மணிநேரமும், பெண்கள் ஒரு வாரத்தில் 37 மணிநேரமும் வேலை செய்கிறார்கள். வழக்கமான ஊதியம் மற்றும் சம்பள ஊழியர்களைப் பொறுத்தவரை, கிராமப்புற ஆண்கள் வாரத்தில் 52 மணிநேரமும், பெண்கள் 44 மணி நேரமும் வேலை செய்கிறார்கள். சாதாரண பணியாளர்களைப் பொறுத்தவரை, கிராமப்புற ஆண்கள் வாரத்திற்கு 45 மணி நேரம் வேலை செய்கிறார்கள், பெண்கள் 39 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.

நகர்ப்புறங்களில், சுயதொழில் செய்யும் ஆண்கள் வாரத்திற்கு 55 மணிநேரமும், பெண்கள் 39 மணிநேரமும் வேலை செய்கிறார்கள். சம்பளம் பெறும் ஊழியர்களும், வழக்கமான ஊதியம் பெறும் ஆண்களும் வாரத்தில் 53 மணிநேரம் வேலை செய்கிறார்கள், பெண்கள் 46 மணி நேரம் வேலை செய்கிறார்கள். சாதாரண பணியாளர்களைப் பொறுத்தவரை, நகர்ப்புற ஆண்கள் வாரத்தில் 45 மணிநேரம் வேலை செய்கிறார்கள், பெண்கள் 38 மணிநேரம் வேலை செய்கிறார்கள் என்று தி வயர் (The Wire) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே பணிநாட்களை நிர்ணயம் செய்வது பற்றி இந்தியாவில் விவாதம் கிளம்பியுள்ளது. அப்படி நடக்கும்பட்சத்தில் ஒரு நாளைக்கு 12 மணிநேர வேலை என, வாரத்திற்கு 48 மணிநேரங்கள் இந்தியர்கள் உழைக்க வேண்டிவரும். இதன்காரணமாக இந்த திட்டத்தை பல தொழிலாளர் சங்கங்கள் எதிர்த்து வருகின்றன.

இதையும் படிங்க.!