Tamil Reader

குழந்தைகள் உட்பட வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர் அனைவரும் கொரோனா பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் – இந்திய அரசு அறிவிப்பு..!

chennai-AIRPORT

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைவரும் கட்டாயம் பயணத்திற்கு முன்பு கொரோனா PCR பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் என டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அமீரகத்தில் உள்ள பயண முகவர்கள், ஏர் இந்தியா நிறுவனம் ஆகியோரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

புதியவகை கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்திய அரசு இந்த முடிவினை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதன்படி, குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் கட்டாயம் கொரோனா PCR பரிசோதனையை மேற்கொண்டிருக்கவேண்டும். வரும் பிப்ரவரி 22 ஆம் தேதிமுதல் இந்நடைமுறை அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் அதன் பதில்களை கீழே காணலாம்.

யாருக்கெல்லாம் RT-PCR பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்?

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைவருக்கும் RT-PCR பரிசோதனை கட்டாயம். தங்களது வீடுகளில் மரணம் நேர்ந்ததால் அவசரகதியில் பயணிப்பவர்கள், கொரோனா பரிசோதனை முடிவை வைத்திருக்கவில்லை எனினும் அவர்கள் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

ஆனால், இப்படிப்பட்ட பயணிகள் தங்களது பயணத்திற்கு 72 மணிநேரத்திற்கு முன்னதாகவே, ஆன்லைன் போர்டலில் இதற்காக விண்ணப்பிக்க வேண்டும். இதில் இந்திய அரசு எடுக்கும் முடிவே இறுதியானது.

விமான நிலையத்தில் பயணிகளுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படுமா?

ஏர் சுவிதா போர்டலில் தங்களது நெகட்டிவ் கொரோனா சான்றிதழை பதிவேற்றியவர்கள் விமான நிலையத்திலிருந்து கொரோனா பரிசோதனை எடுக்காமல் வெளியேறலாம் அல்லது தங்களது பயணத்தைத் தொடரலாம். இருப்பினும் பயணிகள் அனைவரும் 14 நாட்கள் தங்களை சுய கண்காணிப்பு செய்துகொள்ளுதல் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய ராஜ்ஜியம், ஐரோப்பா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு வேறு விதமான வழிமுறைகள் பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்திலிருந்து அல்லது அமீரகம் வழியாக இந்தியா வருவோருக்கான குவாரண்டைன் விதிமுறைகள் என்ன?

கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருப்போர், 14 நாட்களுக்கு தங்களை சுய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல் அவசியம்.

இதையும் படிங்க.!