Tamil Reader

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆற்றில் வீசிய குடும்பம் – உத்திரப் பிரதேசத்தில் அவலம்..!

Covid-19

கொரோனா மருத்துவம், உயிரிழப்பு, மருத்துவ உட்கட்டமைப்பு பற்றாக்குறை, ஆற்றில் வீசப்படும் பிணங்கள் என சமீப காலத்தில் சர்ச்சையில் உத்திரப்பிரதேச அரசு தொடர்ந்து சிக்கிவருகிறது. உத்திரப் பிரதேசத்தில் கங்கையில் பிணங்கள் மிதந்ததால் நீர்ப் பகுதிகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீசக்கூடாது என உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அம்மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ராப்தி நதியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அவரது உறவினர்கள் வீசும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

இதுகுறித்துப் பேசிய பல்ராம்பூர் மாவட்டத்தின் மருத்துவ அதிகாரி வி.வி.சிங்,” மே மாதம் 25 ஆம் தேதி கொரோனா காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 3 நாள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. கொரோனா விதிமுறைகளின்படி அவரது உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது” என்றார்.

இதனிடையே உடலை வாங்கிய உறவினர் இருவர், PPE கிட்டுடன் சென்று, உயிரிழந்தவரின் உடலை பாதுகாப்பு உடையிலிருந்து வெளியே எடுத்து வீசுவது அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. மே 28 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து அம்மாவட்ட காவல்துறை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க.!