Tamil Reader

மனைவியை தினந்தோறும் முத்தமிடுபவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும் – ஆய்வில் தகவல்..!

Husbands who kiss their wives

காதலை வெளிப்படுத்த எத்தனையோ வழிமுறைகள் இருந்தாலும், ஒரு முத்தம் கொடுக்கும் திருப்தியை, வேறெந்த வார்த்தைகளாலும் பொருட்களாலும் தர முடிவதில்லை. தினசரி முத்தம் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அதில் பெரும்பாலானவை கணவன் – மனைவி இடையே முத்தம் பரிமாறப்படும் போது, மன அழுத்தம் குறைவதை உறுதி செய்கின்றன.

இது ஒருபுறம் இருந்தாலும் தினசரி முத்தம் அளிக்கும் தம்பதியின் ஆயுள், முத்தம் அளிக்காதவர்களை விட அதிகம் என ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

1980 ஆம் ஆண்டு ஜெர்மனியில் 2 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், தினசரி பணிக்குச் செல்லும் முன்பு மனைவியை முத்தமிடும் நபர்களின் ஆயுள் 5 ஆண்டுகள் வரை அதிகரிப்பதாகத் தெரியவந்துள்ளது.

வருமானமும் அதிகரிக்கும்…

அதே ஆய்வின் போது, ஜெர்மனியின் முன்னணி தொழில்துறையில் பணிபுரியும் மேலாளர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அனைவருமே அதிக சம்பளம் பெறுபவர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

இப்படி ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 87 சதவீதம் பேர், தினசரி வேலைக்குச் செல்வதற்கு முன்னர் தங்களது மனைவிக்கு முத்தம் கொடுப்பதாக வெட்கத்துடன் ஒப்புக்கொண்டனர். இந்த நபர்களுக்கு பதவி உயர்வும் கிடைப்பதாக தெரியவந்துள்ளது. ஆக, சம்பளத்துக்கும் முத்தத்திற்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

டென்சன்… டென்சன்…

மேற்கு ஜெர்மனியில் வெளிவரும் செலக்டா இதழின் ஆசிரியரும் புகழ்பெற்ற உளவியல் பேராசிரியருமான டாக்டர். ஆர்தர் சாபோ (Dr. Arthur Szabo) தினசரி முத்தம் பற்றி சொல்வதைக் கேளுங்கள்,” சண்டை அல்லது மனத் தயக்கம் காரணமாக மனைவியை முத்தமிடாமல் அலுவலகத்திற்குச் செல்லும் நபரால் வேலையில் ஆர்வம் காட்ட முடியாது. அவர் எளிதில் மன அழுத்தத்திற்கு உள்ளாவார். மேலும் தனது மனைவியை தன்னை நோக்கி கவர, என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றியே அதிகம் யோசிப்பார். தினசரி முத்தமிடுபவர்களுக்கு இந்த சிக்கல் ஏதுமில்லை. அவர்கள் உடலளவிலும், உள்ளத்தின் அடிப்படையிலும் ஆரோக்கியமாக வாழ்வார்கள்” என்கிறார்.

ஆக, மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள், நல்ல சம்பளம் பெறுவதற்கு திருமணமானவர்கள் என்ன செய்யவேண்டும் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். சிங்கிள்கள் விரைவில் மேற்கண்ட நலமோடும் வளமோடும் வாழ தமிழ் ரீடர் வாழ்த்துகிறது.

இதையும் படிங்க.!