கொரோனா காரணமாக இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் (scheduled international passenger flights) இயங்க மார்ச் 23 ஆம் தேதியிலிருந்து தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர், இந்த தடையானது ஜூலை 31 வரை, ஆகஸ்டு 31 ஆம் தேதிவரை என தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்தது.
இந்நிலையில் கடைசி அறிவிப்பின்படி இன்றுடன் (ஆகஸ்டு 31) முடிவடைய இருந்த நிலையில், இந்திய விமானப் போக்குவரத்து தலைமை இயக்குனரகம் (Directorate General of Civil Aviation) இன்று புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. அதில், இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை செப்டம்பர் 30 ஆம் தேதிவரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
— DGCA (@DGCAIndia) August 31, 2020
இருப்பினும், DGCA வால் அனுமதிக்கப்பட்ட சர்வதேச சரக்கு மற்றும் சிறப்பு விமானங்களுக்கும் இந்தத் தடை பொருந்தாது எனவும் DGCA வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பு விமான சேவைகள் தொடரும்:
இந்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பானது திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையே தவிர, வந்தே பாரத் திட்டத்தில் இயக்கப்படும் சிறப்பு விமானங்களுக்கும், இந்தியா மற்ற நாடுகளுடன் போட்டுள்ள ஏர் பபுல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்கப்படும் விமானங்களும் இயங்க எந்த தடையும் இல்லை.