Tamil Reader

விமான நிலையங்களில் முழு உடலையும் ஸ்கேன் செய்யும் கருவி!

scanner

வெளிநாடுகளில் இருந்து பணம், போதைப் பொருட்கள் மற்றும் தங்கம் போன்ற விலைமதிப்புமிக்க பொருட்களை கடத்திக்கொண்டு வருபவர்களைத் தடுக்கும் விதமாக முழு உடலையும் ஸ்கேன் செய்யும் அதிநவீன கருவிகள் இந்தியாவின் 10 சர்வதேச விமான நிலையங்களில் பொருத்தப்படும் என அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தனர்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, கோழிக்கோடு, கொச்சி, ஹைதராபாத், திருச்சிராப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 10 சர்வதேச விமான நிலையங்களில் தலா 3 ஸ்கேன் கருவிகள் பொருத்தப்பட இருக்கின்றன.

மலக்குடலில் வெளிநாட்டு பணம், போதைப் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த வஸ்துக்களை கடத்துபவர்களைப் பிடிக்க இந்த ஸ்கேனர்கள் உதவும். டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் இதுகுறித்து “பலமுறை கடத்தல்காரர்கள் தங்களது மலக்குடல் வழியாக விலை மதிப்புமிக்க பொருட்களை கடத்திச்செல்ல முயன்றிருப்பதாக” தெரிவித்திருக்கிறார்கள்.

நிதியமைச்சகத்தின் லாஜிஸ்டிக்ஸ் துறையின் இயக்குனர் மற்றும் தலைமை ஆணையரான சுரேஷ் கிஷ்ணானி இதுகுறித்துப் பேசுகையில்,” நடப்பு அல்லது அடுத்த நிதியாண்டிற்குள் 10 சர்வதேச விமான நிலையங்களில் 30 எக்ஸ்-ரே கருவிகளைப் பொருத்தும் பணிகளுக்கான டென்டர் விடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் உடல்வழியாக பொருட்களைக் கடத்திச் செல்பவர்களைக் கண்காணிக்க முடியும். மேலும், கடத்தல்காரர்களுக்கு எதிரான சுங்கத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு இந்த எக்ஸ்-ரே கருவி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

smugling gold new
Image Credit : BBC

பல்வேறு சுங்கத்துறை தலைமை ஆணையர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் விமான நிலையங்களில், தங்களுடைய சொந்த செலவில் இத்தகையை நவீன எக்ஸ்-ரே கருவிகளை பொருத்தும்படி வலியுறுத்தியுள்ளதாக கிஷ்ணானி குறிப்பிட்டார்.

30 ஸ்கேனிங் கருவிகளைப் பொருத்தும் பணிகளுடன் கூடுதலாக இத்தகைய புதிய ஸ்கேன் கருவிகளைப் பொருத்தும் பணிகளுக்கும் சேர்த்தே டென்டர் விடப்பட்டிருப்பதாக ஆணையர் தெரிவித்தார்.

வெளிநாடு செல்லும் அல்லது இந்தியா திரும்பும் அனைத்து பிரயாணிகளும் இந்த நவீன ஸ்கேனிங் சோதனைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள். அதேநேரத்தில் சுங்கத்துறை அதிகாரிகளின் சந்தேகத்திற்குரிய நபர்கள் இந்த நவீன இயந்திரத்தின் மூலம் ஸ்கேன் செய்யப்படுவார்கள்.

இந்த எக்ஸ்-ரே ரீதியிலான ஸ்கேனிங்கில் மக்களுடைய தனியுரிமைகள் மீறப்படாது என சுங்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். மேலும் ” இந்த பரிசோதனையின் போது பயணிகளின் உடலமைப்பையோ, அல்லது அங்கங்களையோ இந்த ஸ்கேனிங் கருவி திரையிடாது. மாறாக, உடம்பின் வெளியே அல்லது உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை மட்டுமே திரையில் காண்பிக்கும். இந்த பரிசோதனையினால் எவ்வித பாதிப்பும் பிரயாணிகளுக்கு ஏற்படாது” எனவும் அதிகாரி தெரிவித்தார்.

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் இந்த முழு உடலையும் பரிசோதிக்கும் ஸ்கேனிங் கருவி நிறுவப்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பை விமான நிலைய அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், “இந்த நவீன ஸ்கேனிங் கருவி ஆயுதங்கள், வெடிபொருட்கள், போதைப்பொருட்கள், பணம், விலைமதிப்புமிக்க உலோகங்களைக் கடத்திச்செல்லும் திருடர்களைத் தடுக்கும் மத்திய மறைமுக மற்றும் சுங்க ஆணையத்தின் நடவடிக்கைகளை வலுப்படுத்தியிருக்கிறது” என்றனர்.

30 முழுவுடல் பரிசோதனை ஸ்கேனிங் கருவியைப் பொருத்தும் பணிகளுக்கான டென்டர் வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

ஆயுதங்கள், வெடிபொருட்கள், போதைப்பொருட்கள், பணம், விலைமதிப்புமிக்க உலோகங்கள்/கற்கள், வைரம், நீர்மங்கள், செராமிக்ஸ் போன்றவற்றை துணியிலோ, உடலின் வெளியிலோ அல்லது உள் பகுதிகளின் வழியாகவோ, செயற்கைக் கருவிகள் மற்றும் பிளாஸ்டர் கேஸ்டிங் மூலமாகவோ கடத்திச் செல்பவர்களைக் கண்காணிக்க ஏதுவான நவீன கருவிகள் தேவைப்படுவதாக டென்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மற்ற சில பதிவுகள்