Tamil Reader

கடலில் மூழ்க இருக்கும் சென்னை..! – எது நடக்கக்கூடாதுன்னு நெனச்சமோ… அது நடந்திட்டு இருக்கு… IPCCன் திடுக்கிட வைக்கும் அறிக்கை!

காலநிலை மாற்றத்தால், இந்தியப் பெருங்கடலில் ஏற்படப்போகும் மாற்றங்கள், இந்தியாவில் கடும் வெள்ளப் பெருக்கையும், பேரிடர்களையும் ஏற்படுத்தும் என ஐ.நா.-வின் IPCC குழு வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் மனித குலத்திற்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணியை அடித்துள்ள இந்த அறிக்கை, இனி இயற்கைப் பேரிடர்களுக்கு மத்தியில்தான், மனிதர்களின் இயல்பு வாழ்க்கை இருக்கும் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை அளித்துள்ளது.

IPCC அறிக்கை சொல்வது என்ன?

ஐ.நா.வின் காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவான Intergovernmental panel on Climate change எனப்படும் IPCC அமைப்பு, ஜெனீவாவில் தனது காலநிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உலக வெப்பமயமாதலானது அடுத்த பத்தாண்டுகளுக்குள் 1.5° செல்சியஸ் அளவிற்கு உயர்ந்து விடும், பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் அளவை, உடனடியாக, வேகமாக, பெரிய அளவிற்கு குறைக்காவிட்டால், புவி வெப்பநிலை உயர்வானது 2° செல்சியஸ் அளவைக் கூட தாண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் ஒப்பந்தத்தின்படி அனைத்து நாடுகளும் தங்களது பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்தினாலும் கூட, இந்த நூற்றாண்டின் இறுதியில் புவியின் கூடுதல் வெப்பநிலையானது 3° செல்சியசை தொட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதலானது நீர் சுழற்சியில் ஏற்படுத்தும் தாக்கத்தால் பருவமழைப் பொழிவு மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும் இதனால், அதி தீவிர மழைப்பொழிவும், வறட்சியும் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இவ்விரு நிகழ்வுகளும் நிகழும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலை என்ன?

மற்ற பெருங்கடல்களைக் காட்டிலும், இந்தியப் பெருங்கடல் அதிக உஷ்ணமாகி வருவதாகவும், இதனால் இந்தியாவில் வெப்ப அலை மற்றும் வெள்ளப் பெருக்கு நிகழ்வுகள் அதிகம் உண்டாகும் என்றும், இந்த அறிக்கையை ஆராய்ந்த இந்திய வெப்ப மண்டல வானிலை விஞ்ஞானி ஸ்வப்னா பனிக்கல் கூறியுள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் வெப்பம் அதிகரிப்பதால், நீர் மட்டம் உயர்வதோடு, கரையோரங்களில் அடிக்கடி மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அத்துடன் புயல்கள் அடிக்கடி தாக்கும் என்றும், இவற்றில் சில பாதிப்புகள் எப்போதும் நீங்காது எனவும் கூறியுள்ளனர். நூறாண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் கடல் சீற்றங்கள், இந்த நூற்றாண்டின் இறுதியில், ஆண்டுக்கு ஒருமுறை ஏற்பட வாய்ப்புள்ளதாக, நிபுணர்கள் கூறுகின்றனர். இனி, வறட்சி, வெள்ளப் பெருக்கு, காட்டுத் தீ அடிக்கடி ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Historic Climate Change Report Is 'Code Red for Humanity' - Bloomberg

கடல்நீர் மட்டம் உயரும் அபாயம்

இந்த ஐ.பி.சி.சி. அறிக்கையின்படி, முன்பு நூறு ஆண்டு காலத்தில் கடலில் காணப்பட்ட இந்த நீர்மட்ட உயர்வு, 2050-க்குள் ஆறு முதல் ஒன்பது ஆண்டுகளில் ஏற்படலாம் என்று, இந்திய விஞ்ஞானி ஸ்வப்னா பனிக்கல் கணித்துள்ளார்.

ஆர்டிக் பெருங்கடல் 2050-க்கு முன்பாக செப்டம்பர் மாதத்தில் ஒரு முறையாவது பனி இல்லாத நிலையை அடையும் என்றும் இந்த அறிக்கை எச்சரித்துள்ளது. அத்துடன் உலகின் பல பகுதிகளில் பயங்கரமான காட்டுத்தீ உள்ளிட்ட மோசமான வானிலை நிகழ்வுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடலின் நீர் மட்டும் வேகமாக உயர்ந்து வருவதாகவும், இன்னும் 79 ஆண்டுகளில் கடல் நீர் மட்டம் சுமார் 7 அடி உயர்ந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2150-ம் வது ஆண்டில் கடல் மட்டம், 15 அடிக்கும் மேலாக உயரும் என்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. அத்தகைய விளைவுகள் ஏற்பட்டால், அது 2100-ஆம் ஆண்டில் கடலோர பகுதிகளில் வாழும் பல லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கே அச்சுறுத்தலாக அமையும்.

Remembering the Tsunami of 2004: Here are images which our minds can never forget- The New Indian Express

இந்தியாவில் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ள 12 நகரங்கள்

கண்ட்லா, குஜராத் – 1.87 அடி
ஒக்ஹா, குஜராத் – 1.96 அடி
பவுநகர், குஜராத் – 2.70 அடி
மும்பை, மகாராஷ்டிரா- 1.90 அடி
மோர்முகாவ், கோவா – 2.06 அடி
மங்களூர், கர்நாடகா – 1.87 அடி
கொச்சி, கேரளா – 2.32 அடி
பரதீப், ஒடிசா- 1.93 அடி
கிதிர்பூர், கொல்கத்தா – 0.49 அடி
விசாகப்பட்டினம், ஆந்திரா – 1.77 அடி
சென்னை, தமிழ்நாடு – 1.87 அடி
தூத்துக்குடி, தமிழ்நாடு – 1.9 அடி

தற்போதைய கால நிலையின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த நிலை மாறும் பட்சத்தில் கடல்நீர்மட்டம் உயரும் விகிதத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்பநிலை அறிக்கையைத் தொடர்ந்து, அடுத்து வரும் மாதங்களில் தொடர்ச்சியாக பல்வேறு பருவநிலை விளைவுகளை விவரிக்கும் அறிக்கைகள் வெளியாகவிருக்கின்றன. பாரிஸ் ஒப்பந்ததின் படி கார்பன் உமிழ்வை குறைத்தால் கூட இனி நமது இயல்பு வாழ்க்கையானது பேரிடர்களுக்கு நடுவில்தான் அமையும் என்பதே இந்த அறிக்கை கூறும் முக்கியமான செய்தி!

இதையும் படிங்க.!