Tamil Reader

கொரோனாவால் மரணம் : இறுதி ஊர்வலத்தில் பாடையில் இருந்து எழுந்த பாட்டி – தெறித்து ஓடிய பொதுமக்கள்..!

old lady

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 76 வயதான பாட்டி மயக்கத்தில் இருந்ததைக் கவனிக்காமல் இறந்துவிட்டதாக எண்ணி, இறுதிச்சடங்குகள் செய்ய உறவினர்கள் துவங்கிய வேளையில் திடீரென பாட்டி கண்விழித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் இருக்கிறது முதாலே கிராமம். இங்கு வசித்துவரும் சகுந்தலா கெய்க்வாட் (76) -ற்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவரை அருகில் உள்ள பாரமதி என்னும் ஊரின் தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே படுக்கை கிடைக்கவில்லை.

இதனால் வேறு மருத்துவமனைக்கு செல்ல காரில் ஏறும் போது சகுந்தலா கீழே விழுந்து மயக்கமடைந்திருக்கிறார். அவரை எழுப்பிப் பார்த்தும், உடம்பில் அசைவு இல்லாததால் அவர் இறந்துவிட்டதாக சொந்த ஊருக்கு அவரை தூக்கிச்சென்றனர் அவரது உறவினர்கள்.

இறுதிச் சடங்குகள் துவங்கி, பாட்டியை பாடையில் ஏற்றிய பிறகு திடீரென அழும் சப்தம் கேட்டிருக்கிறது. எட்டிப்பார்த்தால் பாடையில் படுத்திருந்த பாட்டி ஓவென அழுதிருக்கிறார். இதனை நேரில்கண்ட பொதுமக்கள் அங்கிருந்து தெறித்து ஓடியிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பாட்டியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காவல்துறை அதிகாரிகள் விசாரித்ததில் இது உண்மைதான் எனத் தெரியவந்திருக்கிறது.

பாட்டி சரியான நேரத்தில் கண்விழிக்கவில்லை என்றால் இந்நேரம் சோலியை முடித்திருப்பார்கள் அவரது உறவினர்கள்.

இதையும் படிங்க.!