Tamil Reader

இந்தியாவில் COVID-19 காரணமாக சுமார் 40 கோடி தொழிலாளர்கள் வறுமையில் சிக்கும் அபாயம்..!

Indian Workers

இந்தியாவில் COVID-19 தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள தொழில் முடக்கத்தால் சுமார் 40 கோடி தொழிலாளர்கள் வறுமையில் சிக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா சபையின் தொழிலாளர் பிரிவு அமைப்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) கூறியுள்ளது.

உலக அளவில் முறைசாரா தொழிலாளர்கள் 200 கோடி பேர் இருக்கிறார்கள். இந்தியா, நைஜீரியா மற்றும் பிரேசில் நாடுகளில் முறைசாரா தொழிலாளர்கள் பெருமளவு உள்ளனர். இவர்களில் இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் இருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள தற்காலிகத் தொழில் முடக்கத்தால் இவர்கள் மிகக்கடுமையான ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படக்கூடும் என்று இந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மிகப்பெரிய உலகப்பேரழிவாக உள்ளது. தொழில்கள் அனைத்துமே முடக்கப்பட்டுள்ளதால் முறைசாரா தொழிலாளர்கள் அனைவரும் வேலையின்றி தவிக்கிறார்கள்.

இவர்கள் பெரும்பாலும் தினக்கூலிகளாக இருப்பவர்கள். இவர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எஃப் போன்ற எவ்வித தொழிலாளர் நல உதவித்திட்டங்களும் கிடையாது. பணி நிரந்தரமும் கிடையாது.

இப்படியான சூழலில், இவர்களுக்கு வேலையில்லை என்று வீட்டினுள்ளேயே அடைத்துவிட்டால், வருமானத்துக்கு வேறு எந்த வழியுமே இருப்பதில்லை.

COVID-19 வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்வது இவர்களுக்கு ஒரு கவலையென்றால், வயிற்றுப்பாட்டுக்கான வருமான இழப்பு அதைவிடப் பெரிய கவலையாகும். இவர்களைப் பாதுகாக்க தீவிர முயற்சி எடுக்கவேண்டுமென்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!