ஐசிஐசிஐ வங்கி தலைமைச் செயல் அதிகாரி சந்தா கொச்சார் ராஜினாமா!

மும்பை : ஐசிஐசிஐ வங்கி தலைமைச் செயல் அதிகாரி சந்தா கொச்சார் பதவி விலகினார். கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3,250 கோடி கடன் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கொச்சார் ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐசிஐசிஐ வங்கி தலைமையிலான 20 வங்கிகள் கூட்டமைப்பு வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியது. இந்தக் கடன் வழங்கியதற்கு மாறாக, வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத், முறைகேடான வழியில் ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ சந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சாரின் நிறுவனத்துக்கு குறிப்பிட்ட தொகையையும் பங்குகளையும் பரிமாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.3250 கோடி கடனும் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீடியோகான் நிறுவனம் வாங்கிய கடனில் ஏறக்குறைய இன்னும் ரூ.2800 கோடிக்குமேல் திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே தீபக் கொச்­சாரி­டம் சிபிஐ விசா­ரணை நடத்தியது. மேலும் இதுதொடர்பாக ஆலோசிக்க வங்கியின் இயக்குநர் குழு அமைக்கப்ட்டது. அந்தக் குழு விசாரணை நடத்தி முடிக்கும் வரை சந்தா கொச்சார் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கொச்சார் ராஜினாமா செய்துள்ளார். தற்போது புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சந்தீப் பாக்ஷி பொறுப்பேற்றுக்கொண்டார்.