கோதுமைக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.105 உயர்வு

கோதுமைக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.105 உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மேலும் பல தானியங்களின் ஆதார விலை உயர்த்தப்பட்டதால், விவசாயிகளுக்கு ரூ.62 ஆயிரத்து 635 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கமிட்டி கூட்டத்தில், ‘ரபி’ பருவ கோதுமை உள்ளிட்ட தானிய வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன்சிங் கூறியதாவது:-

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.105 உயர்த்தப்படுகிறது. அதனால், அதன் விலை குவிண்டாலுக்கு ரூ.1,840 ஆக உயரும். இது, 6 சதவீத விலை உயர்வு ஆகும்.

பார்லிக்கான ஆதார விலை, குவிண்டாலுக்கு ரூ.30 அதிகரிக்கப்படுகிறது. அதன் விலை ரூ.1,440 ஆக உயரும்.

மூக்கடலைக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.220 உயர்த்தப்படுகிறது. அதன் விலை குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரத்து 620 ஆனது.

மசூர் பருப்பின் ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.225 அதிகரிக்கப்படுகிறது. கடுகுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தப்படுகிறது. குங்குமப்பூவுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.845 அதிகரிக்கப்படுகிறது.

ஆதார விலை உயர்வால், விவசாயிகளுக்கு ரூ.62 ஆயிரத்து 635 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

உற்பத்தி விலையைவிட 50% கூடுதல்

வேளாண் ஆலோசனை குழுவின் பரிந்துரை அடிப்படையில், ஆதார விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அனைத்து ‘ரபி’ பருவ தானியங்களுக்கும் அவற்றின் உற்பத்தி விலையை விட 50 சதவீதம் முதல் 112 சதவீதம் வரை ஆதார விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

வேளாண் விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்தி விலையை விட 50 சதவீதம் அதிக விலை கிடைக்கச் செய்வோம் என்று பாரதீய ஜனதா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு ராதா மோகன்சிங் கூறினார்.