வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை திட்டம் ஆந்திராவில் துவக்கிவைத்தார் சந்திரபாபு நாயுடு.

வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை திட்டம் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் இளைஞர் சக்தி உள்ளது: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு

திருமலை: ‘‘உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் இளைஞர் சக்தி உள்ளது’’ என்று ஆந்திராவில் நடந்த வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார். ஆந்திரா தலைநகர் அமராவதியில் உள்ள உண்டபல்லியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு `யுவநேஸ்தம்’ என்ற பெயரில் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத இளைஞர் சக்தி நமது இந்தியாவில் மட்டுமே உள்ளது. காந்தி பிறந்த நாளில் ‘யுவநேஸ்தம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற நாடுகளில் வயதானவர்கள் அதிகமாக உள்ளனர். இந்தியாவில் மட்டுமே இளைஞர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

படிப்பிற்கு பிறகு பெற்றோர்களை நம்பி இருக்காமல் தங்கள் கால்களில் நிற்கக் கூடிய தகுதியை இளைஞர்கள் ஏற்படுத்திக் கொள்வதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

22 முதல் 35 வயது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டமாகும். இந்த காலக்கட்டத்தில் இளைஞர்கள் குறைந்தது டிகிரியாவது படித்திருக்க வேண்டும் என்பது எனது ஆலோசனை. வெள்ளை ரேஷன் கார்டு உள்ள அனைவரும் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள். செப்டம்பர் 14ம் தேதி இத்திட்டத்திற்கு முழு வடிவம் கொண்டுவரப்பட்டது. இதுவரை 2.10 லட்சத்து பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இன்று அவர்களுடைய வங்கிக் கணக்கில் ஊக்கத் தொகை செலுத்தப்படும். தினந்தோறும் ஒரு மாணவனை போல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை நான் கற்றுக்கொண்டு வருகிறேன். தற்போது உலகில் எங்கு பார்த்தாலும் தகவல் தொடர்புத்துறையில் தெலுங்கு மக்கள் சாதனை புரிந்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக தூய்மை ஆந்திரா திட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தூய்மை பணியை மேற்கொண்டார். இதில் மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.