குழந்தை வளர்ப்பில் குறை வேண்டாமே..!
நாம் பெண்ணாக பிறந்ததற்காக மகிழ்கிறோம். பெண்மையை போற்றுகிறோம். பெண் குழந்தைகளை நன்றாக வளர்த்து, நாளைய தலைவிகளாக்க வேண்டும் என்று மனதுக்குள் எவ்வளவோ திட்டங்களைப் போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் குழந்தைகளை, குழந்தைகளாக வளர்க்கிறோமா?
அதிகாலை 6.00 மணி:
தாய் ஓடிச்சென்று ஆறு வயது மகளைத் தட்டி எழுப்புகிறாள். குளிரடிக்கும் அந்த நேரத்தில் சிறுமி, போர்வையை இழுத்து மூடிக்கொண்டு தூங்குகிறாள். அவளை அறியாமலே வாய், ''இன்னொரு ஐந்து நிமிஷம்மா..'' என்று கெஞ்சுகிறது. தாயும் விட்டுக் கொடுக்கிறார். கூடுதலாக பத்து நிமிடம் ஆகிவிடுகிறது. அந்த குடியிருப்புக்கே கேட்கும் அளவிற்கு தாய் ஓடிவந்து கத்துகிறாள். சிறுமி பயந்து போய் எழுந்தமர்ந்து, தாய் முகம் பார்க்கிறாள்.
6-15 மணி:
சிறுமி சோம்பல் முறித்தபடி வாயில் பிரஷை வைத்துக் கொண்டிருக்கிறாள். ''எவ்வளவு நேரம் பல் தேய்க்கிறதுக்கு..?'' அப்பா குஸ்தி வீரர் போல் வந்து மிரட்டிவிட்டுப் போகிறார்.
6-30 மணி:
மீண்டும் அம்மா முறை. உறக்கம் கலையாமல் டாய்லெட்டில் இருந்து கொண்டிருக்கும் மகளை, žக்கிரம் வெளியே வரும்படி அம்மா அழைக்கிறார். ரோட்டில் எந்த வாகனத்தின் ஹாரன் சத்தம் கேட்டாலும், அம்மாவுக்கு தன்னை அறியாமலே ஒரு பதட்டமான துடிப்பு. ''அது மகளின் பள்ளிக்கூட வாகனமாக இருக்குமோ'' என்று!
6.40 மணி:
குளித்துவிட்டோ, உடம்பைக் கழுவிவிட்டோ வெளியே வரும் சிறுமிக்கு அவசரமாக உடை அணியப்படுகிறது. சாக்சைக் காணவில்லை... ஷ•வைக் காணவில்லை என்ற கூச்சல்.
6.50 மணி:
உணவுக்கான யுத்தம் தொடங்குகிறது. தட்டில் இருக்கும் அத்தனை உணவையும் அடுத்த சில நிமிடத்திற்குள் சிறுமி வயிற்றுக்குள் திணிக்க வேண்டும். அதை நினைக்கும்போதே அவளுக்கு உணவு மீது வெறுப்பு ஏற்பட்டு, வயிறு குமட்டுகிறது. அம்மாவின் விருப்பத்திற்காக அத்தனையையும் வயிற்றுக்குள் திணித்திடும் போது தன்னையும் மீறி அது வாந்தியாக வெளிவந்திடுமோ என்று சிறுமி பதட்டம் கொள்கிறாள். அடுத்து பால். அதைப் பார்த்ததும், ''வயிறு நிறைஞ்சிடுச்சும்மா...'' என்று சொன்னதும் அவள் மண்டையில் லேசாக ஒரு குட்டு. கண்கள் கலங்க மடக்... மடக் என்று குடிக்கிறாள்.
7.00 மணி:
பால் கப்பை கீழே வைப்பதற்குள் பள்ளிக்கூட வேனின் ஹார்ன் சத்தம் அவள் காதுகளில் விழுகிறது. கனமான ஸ்கூல் பேக்கைத் தூக்கி அப்பா, அவள் தோளில் மாட்ட... அம்மா லஞ்ச் பேக்கைத் தூக்கி கையில் கொடுக்க... மறந்து போன புத்தகம் ஒன்று கையில் கிடைக்க அதையும் தூக்கிக்கொண்டு சிறுமி வேனை நோக்கி ஓடுகிறாள்.
வேனில் இருப்பவர் சிறுமியைப் பார்த்ததும், ''žக்கிரம் வா...ஓடிவா...'' என்று தன் பங்குக்கு விரட்டி அழைக்கிறார். அவள் அருகில் சென்றதும், தூக்கி உள்ளே விடுகிறார். வாகனத்திற்குள் அதற்கு முன்பே வந்திருந்து அரைத் தூக்கத்தில் இருக்கின்றன, பல குழந்தைகள்.
8.00 மணி:
அந்த வாகனம் எங்கெங்கோ சுற்றி, எத்தனையோ மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு சாலை போக்குவரத்திற்குள் சிக்கி, பள்ளிக்கூடம் சென்றடைகிறது.
வீட்டில் தாயாரோ, ''அப்பாடா தினசரி நடத்தும் காலை நேர யுத்தம் இப்போதுதான் முடிந்தது. சே.. என்ன கஷ்டம் இது''- என்று ரொம்பவும் அலுத்துக் கொள்வார். அதே நேரத்தில் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்குள் வேனில் இருந்து இறக்கிவிடப்படுகிறார்கள். வகுப்புக்குள் நுழையும் போதே அவர்களிடம் பாதி சோர்வு ஒட்டிக் கொள்கிறது. அதோடு அவர்கள் அன்றைய படிப்பை எதிர்கொள்ள போராடுகிறார்கள்.
நாம் எவ்வளவுதான் சுதந்திர சிந்தனை கொண்டிருந்தாலும் உணவு, உடை, பொழுதுபோக்கு போன்ற விஷயங்களில் குழந்தைகளின் விருப்பம் தெரிந்து நிறைவேற்றினாலும், குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் பலரும் தங்கள் தகுதியை வெளிப்படுத்தவே விரும்புகிறார்கள். ''என் குழந்தைகள் அந்தப் பள்ளியில் படிக்கிறது'' என்று பிரபலமான பள்ளி ஒன்றின் பெயரைச் சொல்வதை பெருமையாக கருதுகிறோம். எந்தக் குழந்தையும் தான் அந்த பிரபல பள்ளியில்தான் படிப்பேன் என்று அடம் பிடிப்பதில்லை. தாங்கள் விரும்பும் பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர் சிபாரிசு, பணச்செலவு போன்றவைகளில் ஈடுபட்டு எப்படியோ இடம் பிடித்துவிடும்போது, அவர்களுக்கு முக்கியமான சில விஷயங்கள் மறந்து போய்விடத்தான் செய்கிறது. குழந்தையிடம் இருக்கும் படிப்புத்திறன், அந்த பள்ளி இருக்கும் இடத்தின் தூரம், அங்கிருக்கும் கல்வி முறை போன்றவைகளை பெற்றோர் மறந்துவிடுகிறார்கள். காலை நேரத்திலே போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுவிடும் இந்த காலகட்டத்தில், பிரபலமான பள்ளிக்கூடத்தில் படிப்பதாக கருதப்படும் குழந்தைகள் வீட்டிலிருந்து மறுமுனையிலிருக்கும் பள்ளியை சென்றடையும்போதே அதிக சோர்வுக்குரியவர்களாகி விடுகிறார்கள்.
நான்கு முதல் பத்து வயதுவரையுள்ள சிறுவர் - சிறுமியர்கள் வேறு பள்ளிக்கூடம், வேறு சூழல், வேறு நண்பர்கள், வேறு பாடத்திட்டம், முன்பின் பார்த்திராத ஆசிரியர்கள் போன்ற மாற்றங்களை சந்திக்கும்போது ரொம்பவும் குழம்பிப் போகிறார்கள். திடீரென்று ஏற்படுத்தப்படும் இத்தகைய மாற்றங்கள் குழந்தைகளுக்கு பெரும் மனநெருக்கடிகளை உருவாக்குகிறது.
அதிகாலையிலே விழித்து, அடித்துப் பிடித்து பள்ளிக்கூடத்திற்கு செல்லும் குழந்தைகளின் கல்வித்திறன் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறியும் ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டது. காலை 7.30 மணிக்கு தொடங்கிய பள்ளிகளில் படித்த சிறுவர்-சிறுமியர்களிடம் திறமை குறைவாகவே இருந்தது. அவர்கள் காலை நேரத்தில் ''மூட்- அவுட்''டாக இருந்ததும் கண்டறியப்பட்டது. அவர்களை நன்றாக தூங்க அனுமதித்த பின்பு அவர்கள் படிப்புத்திறன் அதிகரித்தது. உணவை தேவையான அளவு உண்டனர். மன நெருக்கடியிலிருந்தும் மீண்டார்கள்.
பள்ளிக் குழந்தைகளின் உடல்-மன வளர்ச்சி முழுமை பெற அவர்களுக்கு முழுமையான தூக்கம் அவசியம். 3 வயது குழந்தை 12 மணிநேரம் தூங்க வேண்டும். 4 வயதில் கூடுதலாக அரை மணிநேரம் தூங்கவும், 5 வயதில் 11 மணிநேரம் தூங்கவும் அனுமதிக்க வேண்டும். 6 வயதில் பத்தே முக்கால் மணிநேரமும், 7 வயதில் பத்தரை மணிநேரமும், 8 வயதில் பத்தேகால் மணிநேரமும், 9 வயதில் பத்து மணிநேரமும், 10 வயதில் ஒன்பதே முக்கால் மணி நேரமும் அவர்கள் தூங்க அனுமதிக்க வேண்டும்.
குழந்தைகளின் தூக்கத்தில் இவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதா? என்று கேட்டுவிடாதீர்கள். அவர்கள் முழுமையாகத் தூங்கினால்தான் உடல் வளர்ச்சிக்குரிய ஹார்மோன்கள் நன்றாக சுரக்கும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அவர்கள் நினைவாற்றல் மேம்படவும் முழு தூக்கம் அவசியம்.
வேலை முடிந்தோ, தன் அலுவல்களை முடித்துக்கொண்டோ அநேக தாய்மார்கள் இரவில் வீடு திரும்புகிறார்கள். அவர்கள் பொழுதுபோக்குக்காக டெலிவிஷன் பார்க்கிறார்கள். அல்லது ருசிகரமாக தங்கள் குடும்பக் கதைகளை பேசுகிறார்கள். அல்லது கணவரும்-மனைவியும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி அலசுகிறார்கள். இதில் எது நடந்தாலும் குழந்தைகளால் தூங்க முடிவதில்லை. குழந்தைகள் தாமதமாகத் தூங்குவதற்கு பெற்றோரும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறார்கள். தாமதமாகத் தூங்கும் குழந்தைகள் காலையில் விழிக்க சிரமப்படும். முழுமையாகத் தூங்காத குழந்தைகள் சளி, இருமல் போன்ற சுவாசப் பகுதி நோய்களால் அதிகம் பாதிக்கப்படும்.
முழுமையாகத் தூங்குபவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்கும் என்பது ஏற்கனவே கண்டறியப்பட்டிருக்கிறது. ஆழ்ந்த தூக்கத்தில் மூளையின் செயல் ஆற்றல் அதிகரிக்கிறது. அதனால்தான் இரவில் காணும் கனவுகள் கூட காலையில் நினைவில் இருந்துகொண்டிருக்கிறது. நான்கு வயது சிறுமி காலை ஆறு மணிக்கு விழிக்கிறாள் என்றால், அவள் இரவு ஒன்பது மணிக்கு தூங்கிவிட வேண்டும். அவள் அந்த நேரத்தில் தூங்குவதற்குரிய சூழ்நிலையையும், வாய்ப்புகளையும் பெற்றோர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள். அவர்களுக்கு கல்வி மட்டுமே முக்கியம் அல்ல. ஆரோக்கியமும், வாழ்வியல் பழக்க வழக்கங்களும் அதைவிட முக்கியம்.