மந்திரம் கால்
"இன்றைக்கு என் தோழி ஸ்ரேயா ஈசியா ஒரு திருட்டைக் கண்டு பிடிச்சுட்டா பாட்டி."
"எப்படி?"ஆர்வத்துடன் கேட்டான் சந்தர்
"சுற்றுலாவிற்காக கொண்டுவந்த பணத்தை மைதிலி பையில் வைத்திருந்தாள். விளையாட்டுப் பீரியட் முடிந்து வகுப்பில் வந்து பார்த்தபோது காணவில்லை. மதிய உணவு நேரத்தில் மைதிலி. ஸ்ரேயாவிடம் சொல்லி அழுதிருக்கிறாள். உடனே ஸ்ரேயா எங்கள் எல்லோரையும் அழைத்து தன் பாட்டி கற்றுக் கொடுத்த வித்தையால் திருடியைக் கண்டுபிடிக்கப் போவதாகச் சொன்னாள்.."
"அப்புறம், என்ன ஆச்சு அக்கா?"சந்தர் அவசரப்பட்டான்.
"ஸ்ரேயா ஒரு கையளவு முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டினாள். அது அவள் பாட்டி மந்திரம் சொல்லி மை தடவிய கண்ணாடியாம். திருடியவர் பார்த்தால் முகத்தில் வியர்வை கொட்டி விடுமாம். திருடியவர்கள் தனியாக வந்து பணத்தைத் தந்து விட்டால் திருட்டுப் பட்டம் கிடைக்காது என்று சொன்னாள்.
என்ன ஆச்சரியம்! சாப்பாடு நேரம் முடிவதற்குள் பணம் வந்து விட்டது. மைதிலிக்கு படு குஷி. திருடியவள் யாரென்று ஸ்ரேயா சொல்லவில்லை. நான் அவளிடம் விவரம் கேட்டதற்கு ‘மந்திரம் கால் மதி முக்கால்' என்று சொல்லித் சிரித்தாளே தவிர மந்திரத்தைச் சொல்லித் தரவில்லை. உங்களுக்கு அவங்க பாட்டி சொன்ன மந்திரம் தெரியுமா, பாட்டி?ஆவலுடன் கேட்டாள் புவனா பாட்டி சிரித்துக் கொண்டே "நான் இப்போ சொல்ற கதையைக் கேட்டால் விடை தெரியலாம்."என்று கதையை ஆரம்பித்தார்:
வித்யாசாகர் மேட்டூரில் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார். காவல் நிலையத்துக்குப் போகாமல் வழக்குகளை பஞ்சாயத்தைக் கூட்டி நன்றாக விசாரித்துத் தீர்ப்பு வழங்குவார். அவருடைய தீர்ப்பு யார் மனதையும் புண்படுத்தாது. தீர்ப்பில் நகைச்சுவை இருப்பதால் அனைவரும் சிரித்து விடுவார்கள். கிராமமானதால் திருட்டு வழக்குகள் வராது.
"அப்போ கிராமங்களில் திருட்டே இருக்காதா பாட்டி?"
"அப்படியும் சொல்ல முடியாது. ஆனால், கிராமத்துக்குள் வெளி ஆட்கள் நுழைந்தால் உடனே தெரிந்து விடும். இரவில் ஊர் அடங்கிவிடும். ஜனங்களும் குறைவு."
அந்த ஊரில் மளிகைக் கடை வைத்திருந்த கோவிந்தன் மகள் லதாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டார் ஆறு பவுனில் செயின் ஒன்றை பெண்ணுக்குப் போட்டார்கள். விருந்து தடபுடலாக நடந்தது முடிந்தது. விழாவினால் களைத்துப் போன லதா அந்த நகையை அட்டைப் பெட்டியில் வைத்து மூட மறந்து விட்டாள். அடுத்த நாள் காலையில் நகையைக் காணவில்லை.
பலரும் பலவிதமாக லதாவைக் கேட்க அவள் குழம்பிப் போய் விட்டாள். நகைப்பெட்டியை அவசரத்தில் சரியாக மூடவில்லை என்பதை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. தேடு தேடு என்று தேடியும் கிடைக்கவில்லை.
எல்லோரும் குழம்பிக் கொண்டிருந்த பொழுது கோவிந்தன் தலைவர் வித்யாசாகரிடம் சென்று விபரத்தைக் கூறி காணாமல் போன பொருளைக் கண்டுபிடித்துத் தர வேண்டினார்.
வித்யாசாகர் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்ட பின் கோவிந்தனின் வீட்டுக்கு வந்து நகைப் பெட்டியைப் பார்வை இட்டார். அந்த அட்டைப் பெட்டியில் சிறு கீறல்கள் இருந்தன. அறை சுத்தமாக இல்லை. பாத்திரங்கள், பலகாரங்கள், மளிகைக் கடை சாமான்களின் மூட்டைகள் என்று பண்டகசாலை மாதிரி இருந்தது. காலையில் பார்த்த பொழுது பெட்டி வைத்த இடத்தில் இருந்து சிறிது தள்ளி தலைகீழாக இருந்ததைக் கேட்டு அறிந்து கொண்டார்.
நகை போன செய்தி காட்டுத் தீ போல் பரவ கிராமமே கோவிந்தன் வீட்டருகே கூடிவிட்டது.
வித்யாசாகர் வெளியே வந்து எல்லோரும் பார்க்கும்படியாக நகைப் பெட்டியை வைத்தார். அனைவரையும் சற்று தூர இருக்கச் சொல்லிவிட்டு பெட்டியுடன் பேசினார். அவர் அப்படிச் செய்தது அனைவருக்கும் ஆச்சரியமாகப் பட்டது. சிலர் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள். அறிவுள்ள தலைவர் இப்படிச் செய்வது மடத்தனமாகப் மற்றவர்களுக்குப் பட்டது.
பெட்டியுடன் பேசிய பின் கூட்டத்தைப் பார்த்து உரக்கப் பேசினார். "நான் இந்த பெட்டியுடன் பேசினேன். அது எடுத்தவர் பெயரைச் சொல்லி விட்டது. எடுத்தவர் கையில் பெட்டியில் இருந்த ஸ்டிக்கர் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது."என்று சொன்னவுடன் கூட்டத்தை உற்றுப் பார்த்தார். அனைவரும் அவரையே பார்க்க கோவிந்தன் கடையில் வேலை செய்யும் சுப்பன் மட்டும் அவனுடைய வலது கையை திருப்பித் திருப்பிப் பார்த்தான். அதை வித்யாசாகர் பார்த்துவிட்டார்.
நகையை எடுத்தவனை கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லி அனைவரையும் போகச் சொல்லி விட்டார்.
சுப்பனைக் கூப்பிட்டு விசாரிக்க, செயின் கிடைத்து விட்டது. கோவிந்தனுக்கு விஷயத்தை விளக்கினார்.
காலையில் பருப்பு மூட்டையை எடுக்க கொல்லைப் புறமாக சுப்பன் வந்திருக்கிறான். அப்போது எலி மூடாத பெட்டியைக் கீழே தள்ளிவிட்டிருக்கிறது. வெளியில் விழுந்த நகையைப் பார்த்ததும் ஆசை வந்து சுப்பன் திருடனாகிவிட்டான். பெட்டியை எடுத்து மேலே வைத்துவிட்டு நகையை எடுத்துக் கொண்டான்.
"இப்போ புரியுது பாட்டி. திருடிய பின் உள்ளுக்குள் பயம் வந்து விடுகிறது. அந்த பயத்தைப் பயன்படுத்தி புத்திசாலித்தனமாக திருடர்களைக் கண்டுபிடித்து விட முடியும்."
ஆகவே மந்திரம் என்பது கிடையாது. ஆனால் மந்திரத்தின் பெயரால் மதியை அதாவது புத்தியை வைத்து காரியங்களைச் சாதிக்கலாம். அதனால்தான் ‘மந்திரம் கால்; மதி முக்கால்' என்று சொல்கிறோம்
பாட்டி அன்றைய பொழுதை இனிதே முடித்து வைத்தார்.