பூஜாரியை விரட்டிய பேய்
அன்றைய தின வேலைகள் முடிந்து வழக்கம்போல் மடியில் படுத்துக் கொள்ள பாட்டி வலது கையால் இருவரையும் தட்டிக் கொடுத்துக் கொண்டே கதையை ஆரம்பித்தாள்.
"மதுரையில் இருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் குண்டல் பட்டி என்ற ஒரு சிறிய கிராமம் இருந்தது. அங்கு ஜக்கம்மா பெயர் கொண்ட காளி கோவில் மிகவும் பிரசித்தம். ஊருக்குள் யாரும் சட்டைப் போட்டுக் கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் அது தெய்வ குத்தமாயிடும். பஞ்சாயத்து கூடி ஊர் கட்டுப்பாட்டை மீறி விட்டதாகச் சொல்லி தண்டனை கொடுத்து விடுவார்கள்.
"பாட்டி ரீல் விடறீங்களா. அப்போ வெளிஆட்கள் யாரும் உள்ளே போக முடியாதே. அவர்களுக்குத் தேவையான பொருள்கள் எப்படி கிடைக்கும்? யோசிச்சுப் பார்த்தா வாழவே முடியாதே."
"சரியாகக் கேட்டே. நீ இன்னும் செய்தித்தாள்களைப் படிக்க ஆரம்பிக்கவில்லை. இப்போ கூட ஏகப்பட்ட கிராமங்களில் படிப்பறிவு வந்தும் கூட அறிவுக்கும், சுகாதாரத்திற்கும் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டு வருகிறார்கள். அவைகளைப் பற்றி தெரிந்தால் நீ ஆச்சரியப்பட்டுப் போவாய்."
"தம்பீ, போனவாரம் ஒரு கிராமத்துலே கோவில் முன்னே பூஜையிலே படுத்திருக்கும் பெண்கள் மேலே சாமி வந்தது போல் ஆடிக் கொண்டே பூஜாரி சாட்டையால் அடித்தாரென்று அப்பா ந்யூஸ் படித்துச் நமக்குச் சொல்லலே."
"ஆமா ஆமாம் மேலே கதையை சொல்லு பாட்டி."
"நீ கேட்ட மாதிரி மத்தவங்க இல்லாமே அவர்களால் வாழ முடியாதுதான். அதனால் அந்த ஊரில் உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் சட்டை போட்டுக் கொண்டு தொழில் செய்ய அனுமதித்திருந்தார்கள்.
அந்த ஜக்கம்மா கோவிலில் சடையாண்டி என்ற பெயர் கொண்ட பூஜாரி இருந்தான்.
ஆண்டுக்கு ஒருமுறை பேய் ஓட்டும் திருவிழா நடக்கும். பேய் பிடித்த பெண்களை பல ஊர்களில் இருந்து கோவிலுக்கு கூட்டி வருவார்கள். அவர்களை ஜக்கம்மாவுக்கு முன் தலைவிரி கோலமாக உட்காரவைத்து பூஜாரி உடுக்கு அடித்து ஆட வைப்பான். ஆடும்பொழுது வேகமாக ஆடச்சொல்லி குச்சியால் அடிப்பான். அப்படிச் செய்தால் ஜக்கம்மா பேயை விரட்டி விடுவாள் என்ற நம்பிக்கை இரத்தத்தில் ஊறிப் போயிருந்தது. அப்படி ஆடும் பெண்களைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும்.
. கிராமங்களில் பெண்களுக்கு நிறைய கஷ்டங்களுக்கும் கவலைகளும் வருகின்றன. இவைகளைத் தாங்கமுடியாத சிலருக்கு மனநிலை பாதிக்கப் பட்டு பைத்தியம் போல் ஆகி விடுவார்கள். அவர்களுக்குப் பேய் பிடித்து விட்டதாகச் சொல்லி இப்படி கொடுமைப் படுத்துவார்கள்.
சாதாரண நாட்களில் பேய் பிடித்த பெண்கள் வீடுகளுக்குச் சென்று சடையாண்டி உடுக்கை அடித்து பேயை விரட்டுவான். சாம்பிராணி புகை வந்து கொண்டிருக்கும் சட்டியின் அருகே தலையை அமுக்கி வட்டம் போட்டு சுற்றச் சொல்லி பாடுவான்.
கொள்ளி மலைமேலே கொள்ளி மலைமேலே
குடியிருக்கும் கோணவாய்ப் பேயே நீ
குமரிப் பொண்ணுமேலே குதித்து வந்து குந்திட்டயா
அஞ்சு நிமிஷத்துலே நீ பஞ்சா பறக்காட்டா
ஜக்கம்மா நானு உன்ன சாட்டையாலே சாகடிப்பேன்
குறிஞ்சி நெலத்துக்குள்ளே குறிஞ்சி நெலத்துக்குள்ளே
குறும்பாடு தின்னுகிற குறளைப் பேயே நீ
கொஞ்சுகிற மங்கைமேலே கொழுப்பெடுத்து வந்துட்டே
அஞ்சு நிமிஷத்துலே நீ பஞ்சா பறக்காட்டா
ஜக்கம்மா நானு உன்ன சாட்டையாலே சாகடிப்பேன்
உடுக்கையும் அடித்துக் கொண்டு சத்தம் போட்டு பாடிக் கொண்டே வேப்பங்குச்சியால் அடிப்பான். முடியைப் பிடித்து ஆட்டுவான். பெண் அசந்து போய் மயக்கமடையும் போது பேய் ஓடிவிட்டதாகச் சொல்லி உரக்கச் சிரிப்பான். பெரும்பாலும் இரவில்தான் இந்த பேய் ஓட்டும் வேலை நடக்கும்.
இந்த பேய் ஓட்டும் வேலையால் சடையாண்டிக்கு நல்ல வருமானம். அதோடு அந்த வீட்டில் நல்ல அசைவ சாப்பாடு சாராயத்தோடு கிடைக்கும். கணக்கில் சொல்ல முடியாத அளவிற்கு எல்லா ரகப் பேய்களை ஓட்டி விட்டதாக தம்பட்டம் வேறு அடித்துக் கொள்வான்.
அந்தக் கிராமத்தில் பலரகப்பட்ட வேலைகளைச் செய்து கொண்டிருந்தவன் பெயர் கருப்பன். பெயரைப்போல் நெருப்பைக் குளிப்பாட்டியது போல் கறுப்பாக இருப்பான். குட்டையாய் கட்டையாய் உருண்டு திரண்ட தேகம் கொண்டவன். ஒரு காலை ஊன்றி நடப்பான். அவன் வரும் பொழுது ஆடிக்கொண்டே வருவது போல் தெரியும். தலையில் எப்பொழுதும் கட்டிக் கொண்டு இருக்கும் வெள்ளை முண்டாசை சரியான பொருத்தம் என்று கேலி செய்வார்கள்.
கருப்பனுக்கு வீடு வாசல் கிடையாது. சில்லறை வேலைகளைச் செய்துவிட்டு பஞ்சாயத்துத் தலைவர் வீட்டுத் திண்ணையில் இரவில் படுத்துக் கொள்வான். அமாவாசை மை இருட்டிலும் தோட்டங்களில் சுற்றிக் கொண்டிருப்பான். கிராமத்து எல்லையில் பாழடைந்த மண்டபம் ஒன்று இருந்தது. மழை காலத்தில் அவன் இரவில் அங்கு படுத்துக் கொள்வான்.
சடையாண்டி பேய் பிசாசுகளைப் பற்றிச் சொல்லி கருப்பனை பயமுறுத்துவான். கருப்பனோ இதெல்லாம் ஊரை ஏமாற்றுகிற வேலை என்று சொல்லிச் சிரிப்பான். பேய், பிசாசுகள் கிடையாது என்றும் அப்படி இருந்தால் பிடித்து வந்து காட்டுவதாகவும் சொல்வான்.
ஒருநாள் இரவு மேகமூட்டமாக இருந்தது. மழை வருவதை அறிந்த கருப்பன் சாப்பாட்டிற்குப் பிறகு படுத்துக் கொள்ள மண்டபத்திற்குப் போய்விட்டான். விடியுமுன் முதல் பஸ் பிடித்து தங்கை குடும்பத்தைப் பார்க்க மதுரை போக வேண்டும். தூக்கம் வரவில்லை. ஒரு பெரிய முயல் புதரிலிருந்து வெளியே வந்து மேய்ந்து கொண்டு இருந்தது. அப்பொழுது அடித்த மின்னலில் கருப்பனுக்கு அது நன்றாகத் தெரிந்தது. அதைப் பிடிக்க ஒரு கம்பை எடுத்துக் கொண்டு பதுங்கிப் பதுங்கி அதன் பின்னால் சென்றான். இருட்டில் முயல் மறைவதும் அதைக் கண்டுபிடித்து அடிக்க சமயம் பார்ப்பதுமாக கண்ணாமூச்சி விளையாட்டு நடந்து கொண்டு இருந்தது. கொஞ்ச நேரத்தில் பக்கத்து கிராமத்தை இணைக்கும் சாலை அருகில் வந்து விட்டான்.
அப்பொழுது அந்தக் கிராமத்தில் ஒரு வீட்டில் பேய் ஓட்டும் வேலையை முடித்து விட்டு குடி போதையோடு சடையாண்டி வந்து கொண்டிருந்தான். மின்னல் அடிக்க புதருக்குள் ஒளிந்திருந்த கருப்பனின் வெள்ளை முண்டாசு காற்றில் ஆடிக்கொண்டிருப்பது கண்ணில் பட்டது. போதையில் இருந்தவன் பேய் வெள்ளை உருவத்தில் தன்னிடம் வருவதாக நினைத்து அலறிக் கொண்டு ஓடினான். திருடன்தான் ஓடுகிறான் என்று எண்ணிய கருப்பன் முயலை விட்டுவிட்டு ‘ நில்லுடா திருட்டுப் பயலே’ என கட்டைக் குரலில் கத்திக் கொண்டே சடையாண்டியைப் பிடிக்க ஓடினான். திரும்பிய பொழுது கருப்பனின் கருத்த உடல் தெரியாமல் முண்டாசு மட்டும் பறந்து வருவதாய் நினைத்துக் கொண்டு வழி மாறி ஓடிய பொழுது கால்கள் இடறி பாறாங்கல் மேல் விழுந்தான். மண்டையில் அடிபட்டு இறந்தே போனான்.
கருப்பனும் திருடன் அகப்படாமல் தப்பித்து விட்டதாக நினைத்து முயல் கிடைக்காத ஏமாற்றத்தோடு மண்டபம் வந்து படுத்தான். விடியுமுன் மதுரைக்குச் சென்று விட்டான்.
அடுத்த நாள் பூஜாரி இறந்த செய்தி பரவ இரண்டு கிராமத்து மக்களும் வந்து பார்த்தார்கள். பேய் ஓட்டுகிறவரையே பெரிய பேய் கொன்று விட்டதாக நம்பி தங்களை காப்பாற்ற ஜக்கம்மாவுக்கு படையல் போட்டு இன்னொரு பூஜாரியைக் கொடுக்க வேண்டினார்கள்.
இந்த கதையிலிருந்து என்ன புரிந்து கொண்டாய் சந்தர்?"
" பேய் பூதமுன்னு ஒண்ணும் கிடையாது. மனபயத்தினாலும் மற்றவர்கள் அதை தூண்டி விடுவதாலும் மடத்தனமாக பயப்பட வேண்டியதாகி விடுகிறது."
"பாட்டி போன வாரம் சரித்திர பாடத்தில் நெப்போலியனை கடல் யுத்தத்தில் தோற்கடித்து புகழ் பெற்ற இங்கிலாந்து தளபதி நெல்சனைப் பற்றி ஆசிரியர் சொன்னார். அவர் சிறு பிள்ளையாக இருந்த பொழுது நன்றாக இருட்டிய பின் பூங்கா ஒன்றில் தனியாக சிந்தித்துக் கொண்டிருந்தாராம். அவரைத் தேடி வந்து கண்டுபிடித்த அவர் அப்பா, ‘பயமாக இல்லையா’ என்று கேட்டாராம். அதற்கு, ‘ பயம் என்றால் என்ன' என்று கேட்டு அதிர்ச்சி அடைய வைத்தாராம்." என்றாள் புவனா
"அப்படித்தான் இருக்கவேண்டும்" என்று பாராட்டிய பாட்டி அடுத்த நாளுக்கான கதையை யோசித்துக் கொண்டே தூங்கிப் போனார்.