சுயநலம்
சுமதி இரவு உணவை பரிமாற ஆரம்பிக்கும் சமயம் அப்பாவின் அருகில் இருந்த சுந்தர் “அப்பா இன்னைக்கு க்ளாஸ் முடியறப்போ யாரும் சுயநலமாக இருக்கக் கூடாதுன்னு டீச்சர் சொன்னாங்க. சுயநலம்னா என்னாப்பா?“
“உனக்கு கிடைத்த அப்பளத்தைக் காலி பண்ணிட்டு பாட்டிகிட்டேயும் வாங்குறேல்ல. அதைத்தான் சுயநலம்னு சொல்றது.“ என்றாள் புவனா
“அப்படியில்லை புவனா, சந்தருக்கு அப்பளம் மேலே ஆசை. அதை சுயநலமுன்னு சொல்லமுடியாது“ என்றாள் பாட்டி
“அப்ப நீங்கதா�ன் அவங்களுக்கு கதை சொல்லி நல்லாப் புரியவைக்கணும்.”
“சரி, சாப்பிட்டப் பிறகு உங்களுக்கான வேலைகளை முடிச்சிட்டு வாங்க. இதைப் பற்றிய கதை சொல்கிறேன்.”
இருவரும் சாப்பிட்ட தட்டுக்களை கழுவி வைத்து விட்டு பல் தேய்த்தார்கள். அம்மாவுக்கு உதவி செய்ய புவனா சமையலறைக்குள் செல்ல, அப்பா இஸ்திரி போடுகின்ற துணிகளை சந்தர் அடுக்கி வைத்தான்.
“படுக்கையெல்லாம் ரெடி பண்ணி விட்டேன். வாங்க நேரமாச்சு,” இது பாட்டி.
கால்களை நீட்டி உட்கார்ந்திருந்த பாட்டியின் இரு பக்கங்களிலும் பேரப் பிள்ளைகள் தலை வைத்துப் படுக்க பாட்டிக்கு சுகமாக இருந்தது. அவர்களின் தலை முடிகளை பாந்தமாக தடவிக் கொண்டு கதையை ஆரம்பித்தாள்.
“கடலூரிலே ஒரு பெரிய ஏரி இருந்திச்சு.”
“கடலுக்குள்ளே ஏரி எப்படி இருக்கும் பாட்டி?”
“ராஜா, கடலூர் என்ற ஊரிலே பெரிய ஏரி இருந்ததுன்னு சொல்ல வந்தேன்.”
“ஒ! அப்பிடியா, மேலே சொல்லு.”
“அதுலே நிறைய தண்ணீர் எப்பவும் இருக்கும். தண்ணீர் இருந்தா அதிலே என்ன இருக்கும்? புவனா, நீ சொல்லே�ன்.”
“மீன்கள் நிறைய இருக்கும். போன மாசம் பெரிய கோவிலுக்கு பிக்னிக் போன போது பக்கத்துல இருந்த குளத்திலே மீன் பிடிச்சதைப் பார்த்தேன் பாட்டி.”
“சரியா சொன்னே, அதேபோல நான் சொன்ன ஏரியிலே நிறைய பல விதமான மீன்கள் இருந்திச்சு. அதை நம்பி செம்படவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.”
புவனா கேட்டாள், “செம்படவர்கள்னா?”
“மீன் பிடித்து அவற்றை விற்று வாழ்க்கை நடத்துபவர்களை அப்படி சொல்வாங்க. வலை வீசிப் பிடிப்பதால் வலையர்கள் என்றும் பெயர் உண்டு.”
“அப்படியா, சரி அப்புறம்?”
“அந்த செம்படவர்கள்ல ஒருவன் பெயர் சின்னான். அவன் மனைவி சங்கு கைராசிக்கார சமையல்காரி. அதுவும் மீன் குழம்பு, வறுவல் செய்தால் வாசனை ஊரையே தூக்கும்.
நிறைய மீன்கள் கிடைத்தாலும் சின்னான் அவனுக்கு வேண்டியதை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை விற்றுவிடுவான். ‘நல்லா இருக்கு, நல்லா இருக்கு’ன்னு மீன் துண்டுகள் எல்லாம் காலி பண்ணிடுவான். சங்குக்கு குழம்பு மட்டுமே கிடைக்கும்.”
“ரொம்ப மோசமா இருக்கே, பாவம் சமைச்சவங்களுக்குக் கூட தராம சாப்பிட அவனுக்கு மனம் எப்படி வந்துச்சு?” என்றாள் புவனா
“புவனா, இந்த மாதிரி குணத்துக்கு என்ன பெயர்.”
“வேறெ�ன்�ன, சுயநலம்தான் பாட்டி.”
“சரியாச் சொன்னே; மற்றவர்களைப் பற்றிய அக்கறை இல்லாமல் தங்கள் சுகத்தை மட்டும் பெரிதாக எண்ணுபவர்கள்தா�ன் சுயநலவாதிகள்.”
“சரி..சின்னான் ஒரு சுயநலவாதி. மேலே கதையைச் சொல்லு.”
“ஒரு நாள் மற்ற மீன்களோடு அவனுக்குப் பிடித்த வாலை மீன் ஒன்று கிடைத்தது. அதை வறுவல் செய்யச் சொல்லிவிட்டு ஏரிக்கு குளிக்கப் போய் விட்டான்.
“சங்கு வறுவல் செய்து கொண்டிருக்கும் போது, மணம் அவளது மூக்கைத் துளைத்தது. அடக்கிக் கொண்டிருந்த ஆசை ஒரே ஒரு துண்டை எடுத்து வாயில் போட வைத்தது. அவளையும் அறியாமல் சப்புக்கொட்டிச் சாப்பிட்டுக் கொண்டே எல்லா துண்டுகளையும் காலி செய்துவிட்டாள். சட்டி காலியான பிறகுதான் சின்னான் நினைப்பு அவளுக்கு வந்தது.
“சின்னான் ரொம்பக் கோபக்காரன்; ஒரு சின்னத்தப்பு செய்தாலும் அடித்து நொறுக்கி விடுவான். அதுவும் அவனுக்கு மிகவும் பிடித்த வாலை மீன் வறுவல் இல்லை என்றால் கொன்றே போட்டு விடுவான்,.”
“ஐயோ, சங்கு நிலைமை பாவமா இருக்கே, எப்படி இதை அவள் சமாளித்தாள் பாட்டி.”
“சிலருக்கு அதிக பயம் வந்தாலும் அதைச் சமாளிக்கும் திறமையும் கூடவே வந்துவிடும். அது போல அவளுக்கு ஒரு யோசனை வந்தது. சின்னான் மாரியம்மன் கோவிலில் பெண்கள் சாமி ஆடுவதை பயபக்தியோடு பார்ப்பது அவள் நினைவுக்கு வந்தது.”
“சாமி ஆடறதா, ஒண்ணும் புரியலை பாட்டி.”
“கிராமங்கள்ல திருவிழாக்கள் அல்லது பூஜை நடக்கும்போது பக்தி பரவசத்தில சில பெண்கள் தங்களையே மறந்து ஆடுவாங்க. அப்போ அவங்க மேல சாமி வந்து இறங்கி இருக்கறதா கிராமத்து மக்கள் நம்புவாங்க. சில சமயம் வீடுகள்ல சாமி கும்பிடும்போதே இப்படி ஆகறதுண்டு”
“ம்..சரி”
“சங்கு, வீட்டில் இருந்த வாழைக்காய் ஒன்றை வறுவல் செய்து வைத்தாள். தனது பெரிய கூந்தலை அவிழ்த்துப் போட்டுக்கொண்டு வீட்டு வாசல் படியில் தலை வைத்து சின்னான் உள்ளே வர முடியாதபடி படுத்துக் கொண்டாள்.”
“அடடே! அப்புறம்.” ஆர்வமானாள் புவனா.
“சின்னான் குளித்த பிறகு நல்ல பசி உண்டாகி விட பெரிய வாழை இலை ஒன்றை வாங்கிக் கொண்டு வந்தான். வீட்டில் சங்கு சாமி படத்தின் முன் கண்மூடி அமர்ந்திருந்தாள். அவளைத் தட்டி சாப்படு போடச் சொன்னான். அதற்கு அசையாமலிருந்த அவளின் முடியைப் பற்றி இழுத்தான்
“இதை எதிர்பார்த்த சங்கு சாமி வந்தது போல் பாடிக் கொண்டே ஆட ஆரம்பித்தாள்.
“ஐ நல்லா இருக்கு. அப்படி என்ன பாட்டு பாடினாள் பாட்டி?”
“வலையா, வலைப் பயலே,
வலை முடியும் செம்படவா,
வலை முடிந்த கையாலே,
என் திருமுடியை தொட்டிழுத்தாய்,
உன் வாழைமீன் துண்டமெல்லாம்,
வாழைக்காயாய் போகட்டுமடா.”
சின்னான் பயபக்தியோடு பார்த்துக் கொண்டிருந்தான். சாமி மலை ஏறும் போது பூசாரி விபூதியை முகத்தில் அடிப்பது 'டக்'கென்று நினைவுக்கு வர, இவனும் அதேபோல் செய்ய, சங்கு அமைதியாகி விட்டாள்.
கடாய் சட்டியை திறந்தபோது வாழை மீனுக்குப் பதில் வாழைக்காய் இருந்தது. அடுத்த நிமிடம் சங்குவின் கால்களில் விழுந்து, “தாயே மன்னிச்சிடு, என்னை சபிச்சிடாதே. இனி உனக்குத் தந்துவிட்டு மீதியை சாப்பிடுகிறேன்” என்று வேண்டிக் கொண்டான்.
“அன்றையிலிருந்து சங்குவிற்கு வேண்டியதைக் கொடுத்து விட்டுச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். அது மட்டுமல்ல, தன்னுடைய சுயநலத்தை வீட்டில் மட்டுமல்லாமல் மற்ற விஷயங்களிலும்விட்டு விட்டான்”
“பாட்டி, சுயநலத்தைப் பற்றிய கதை நல்லா இருந்தது. இதை நாளை என் ப்ரண்ட்ஸ் கிட்டேயும் சொல்லப் போகிறேன்.”
“சரிடா, தங்கம் இப்போ போய் நல்லாத் தூங்குங்க.’
பிள்ளைகள் இருவரும் சங்கு பாடிய பாட்டை முணுமுணுத்துக் கொண்டே தூங்கப் போனார்கள்.