கெடுவான் கேடு நினைப்பான்
முன்பொரு காலத்தில் ஒரு ராஜாவிற்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
அந்த நாட்டு மக்கள் இரட்டைக் குழந்தைகளைக் கெட்ட சகுனமாக நினைத்து, பிறந்த உடனே குழந்தைகளைக் கொன்று விடுவார்கள்.
ஆனால் ராஜாவிற்குக் குழந்தைகளை கொல்ல மனமில்லாமல், தனது விசுவாசமான வேலைக்காரனிடம் ராணியையும் குழந்தைகளையும் வெகு தூரத்தில் விட்டு வரச் சொன்னான்.
அந்தக் குழந்தைகளும் அன்புடன் ஒற்றுமையாக வளர்ந்தார்கள். ராணி இறக்கும் சமயம் அவர்கள் ராஜகுமாரர்கள் என்ற உண்மையைச் சொல்லிவிட்டு இறந்துபோனாள்.
அன்று முதல் அவர்கள் இருவரும் மீண்டும் அரசனாக வேண்டும் என்று திட்டமிட்டனர்.
அந்தச் சமயம் அந்த அரசன் வாரிசு இல்லாமல் இறந்த செய்தி வந்தது. சகோதரர்களுக்குள் ஒருவர் நாட்டுக்குத் திரும்பி அரசனாக வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
யார் அரசனாவது என்ற போட்டியில், அவர்களில் யார் அதிக தூரம் கல் எறிகிறார்களோ அவரே அரசன் என்று முடிவெடுத்து, கல் எறிந்தபோது இளையவன் வென்றான்.
அவனும் நாட்டுக்குத் திரும்பி மக்களின் சம்மதம் பெற்று முடி சூடினான். மூத்தவனையும் சகல மரியாதையுடன் அழைத்து வந்தான்.
நாட்கள் செல்லச் செல்ல மூத்தவன் பொறாமையில் மனம் வெம்பினான். ஒரு நாள் சமயம் பார்த்து, அரசனோடு உலாவச் சென்ற போது அரசனை நதியில் தள்ளி விட்டான்.
அரச சபைக்குச் சென்று மந்திரிகளிடம் வந்து சகோதரனுக்கு அரசாள விருப்பம் இல்லாமல் தன்னிடம் அரசைக் கொடுத்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியதாகச் சொன்னான். எவருக்கும் சந்தேகம் வரவில்லை. அவனே முடி சூட்டிக்கொண்டான்.
ஒரு நாள் நதிக்கரையில் அவன் உலாவச் சென்ற போது மீன் ஒன்று துள்ளி எழுந்து, “உன் சகோதரன் இங்கு இருக்கிறான், இங்கு இருக்கிறான்”. என்று சத்தம் போட்டது.
அவனுக்குக் கோபம் வந்து அந்த மீனைக் கல் எறிந்து கொன்று விட்டான்.
மீண்டும் ஒரு நாள் மந்திரிகளுடன் அந்தப் பக்கம் சென்ற போது, நதி அலையே மேலே எழுந்து, “உன் சகோதரன் இங்கு இருக்கிறான், சகோதரன் இங்கு இருக்கிறான்” என ஆரவாரத்துடன் கூறியது.
மந்திரிகளுக்குச் சந்தேகம் வந்து நீருக்குள் சென்று பார்த்த போது அரசனின் உடல் கிடைத்தது.
எல்லோரும் அந்தக் கெட்ட சகோதரனை வெறுத்து ஒதுக்க, அவனும் அவமானத்தில் இறந்து போனான்.
கருத்து : பொறாமை குணம் கொண்டவர் அக்குணத்தினாலேயே அழிந்து போவர்.