கூண்டில் பேய்
இரவுச் சாப்பாடு முடிந்து கை கழுவும் நேரம். தனக்கு மிகவும் பிடித்தமான பாயசத்தை சந்தர் ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
“அப்பா, தம்பி கொஞ்ச நாளா காலையிலே சாமி கும்பிடுறதை நிறுத்தி விட்டான். அதற்குப் பதிலா இரவு கதை கேட்குமுன் கும்பிடுறான்.”
“சந்தர் என்ன ஆச்சு?”
“ராத்திரியிலே பேய் பிசாசுகளுக்கு பகல் நேரமாம். அதுங்க நம்மை பிடிக்காமல் இருக்க சாமி கும்பிடணும் என்று முரளி சொன்னாம்பா. அதனாலே நேரத்தை மாத்திக்கிட்டேன். பகல்லே அதுங்க தூங்கிக்கிட்டு இருக்கும். அப்போ எனக்கு பயம் இல்லை..”
“பேராண்டி உன் நண்பன் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு விட்டான். நீயும் பயந்து போய் அதை நம்பிட்டே. இதைக் கேட்டதும் எனக்கு ராஜகுமாரி தாமரைச் செல்வியோட கதைதான் நினைவுக்கு வருது. கண்ணுங்களா, நித்திய காரியங்களை முடித்து விட்டு வாங்க. நான் ரெடியா இருக்கேன். சந்தர், நீ சாமி கும்பிட்டுட்டே வா. எத்தனை தடவை கும்பிட்டாலும் நல்லதுதான்.”
காலம் என்னும் கடிகாரம் கதை சொல்லும் நேரத்தைக் கொண்டு வந்தது. பாட்டியின் நீட்டிய கால்கள் இருவருக்கும் தலையணை ஆக அது மூவருக்கும் சுகம் கொடுக்க கதை ஆரம்பம் ஆனது.
மங்களாபுரி நாட்டை பார்த்திபன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருக்கு, பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. ஆலய தரிசனங்கள் செய்தும், தர்ம காரியங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு கடவுளை வேண்டிக் கொண்ட பின் அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு தாமரைச் செல்வி என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார். நாட்டுக்கு ராணி கிடைத்து விட்டது அறிந்து நாடே மகிழ்ச்சி அடைந்தது.
இரண்டு வயதிலேயே தூங்கும் பொழுது கதை கேட்கும் பழக்கம் அவளுக்கு வந்து விட்டது. ராஜா, ராஜகுமாரிக்குக் கதை சொல்ல நிறைய பேர்களை நியமித்தார். ஆர்வம் அதிகமாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதை கேட்டாள். ஆண்டுகள் ஓடி வயதும் ஐந்தாகியது. அப்பொழுது புதிய தாதி ஒருத்தி ராஜகுமாரிக்கு கதை சொல்ல வந்தாள்.
அவள் பேய் பிசாசு பற்றிய கதைகளைச் சொல்ல அவைகள் தாமரைச் செல்விக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேய், பிசாசு, பூதக் கதைகளைச் சொல்லச் செய்வாள். தாதியும் சளைக்காமல் இளவரசி பயந்து போகும் அளவிற்கு கதைகளைச் சொன்னாள்.
இளவரசியின் மனதில் மனதில் பேய், பிசாசு, பூதம் செய்யும் பயங்கரமான கொடுமைகள் பதிந்து விட்டன. கதை கேட்கும் போதே பயந்து விடுவாள். இருந்தாலும் வேறு கதைகள் பிடிக்காது.
ஒருநாள் இரவு கதை கேட்டு விட்டு பயத்துடன் தூங்கும் பொழுது ஒரு கனவு கண்டாள். அதில், ஒரு பேய் தனது நீண்ட பற்களால் அவளைத் தூக்கிக் கொண்டு காட்டுக்குள் ஓடி ஒரு மரத்தின் கிளை மேல் வைத்து விட்டது. வில்லைப் போல் வளைந்து கைகளும் கால்களும் தொங்க மரத்தின் உச்சியில் ஊசலாடிக் கொண்டு இருந்தாள். கீழே பேய்க் கூட்டம். தரையில் தீயை மூட்டியது. அதில் சுள்ளிகளைப் போட்டு நெருப்பை உண்டாக்க அது வேகமாக எரிய ஆரம்பித்தது. சில பிசாசுகள் கட்டைகளைப் போட்டு எண்ணையை ஊற்ற நெருப்பின் ஜ்வாலை ராஜகுமாரியைத் தீண்ட ஆரம்பித்தது. அவளால் சூடு தாங்க முடியவில்லை. கீழே நெருப்பைச் சுற்றி பல பிசாசுகள் சுற்றி வந்து கும்மி அடித்தன.
மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்தவளை ஒரு குட்டிப் பேய் நெருப்பில் தள்ளப் பார்த்தது. அதை உணர்ந்து அவள் கைகளால் மரக்கிளையை இறுகப் பற்றிக் கொண்டாள். இதைப் பார்த்ததும் இன்னொரு பேய் அவள் கைகளை வெட்ட கத்தியை ஒங்கியது.
இதுவரை பயந்து நடுங்கிக் கொண்டு இருந்தவள் ‘ஐயோ’ என கதறி படுக்கையில் இருந்து உருண்டு கீழே விழுந்து கிடந்தாள்.
அப்பொழுது காற்றில் ஆலமரத்து இலைகள் சலசலத்தன. அதிலிருந்த ஆந்தை ஒன்று கத்த வௌவால் ஜன்னல் வழியாக வந்து அவள் மேல் மோதிப் பறந்தது. இலைகள் அசைவது பேய் ஓடுவது போல் தெரிய பயந்து அலறல் போட்டாள்.
தாதிகள் வந்து விளக்கேற்ற சிறிது நேரமாயிற்று. ராஜகுமாரி அழுது நடுங்கிக் கொண்டு இருந்தாள்.
அன்றிலிருந்து ராஜகுமாரிக்கு பேய்ப் பயம் வந்து விட்டது. என்ன விளக்கம் சொல்லியும் பயனில்லை. இருட்டைக் கண்டாலே பயப்பட ஆரம்பித்து விட்டாள். மாலை வந்தவுடன் விளக்கு ஏற்றச் செய்தாள். இருட்டில் தூங்கும் பழக்கமும் போய் விட்டது. இரவு முழுதும் வெளிச்சம் இருக்கும் படி பார்த்துக் கொண்டாள். சரியான தூக்கம் இல்லாமலும், சரியாக சாப்பிடாமலும் இளைத்துப் போய் விட்டாள். முகமும் களை இழந்து சோகமாகப் போய் விட்டது.
இந்த விஷயம் ஊர் மக்களுக்குத் தெரிய மிகவும் கவலைப் பட்டார்கள். அதோடு பேய் பிசாசு பூதங்களைப் பற்றி பல விதமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். ராஜாவுக்கும் ராணிக்கும் தங்கள் ஒரே மகளின் நிலைமையைப் பார்த்து வேதனையாக இருந்தது. அவர்கள் செய்த முயற்சிகள் பலன் தரவில்லை. கடைசியில் மதியூக மந்திரி ராஜாவுக்கு ஒரு யோசனை சொல்ல அது ராஜகுமாரியைக் காப்பாற்றியது
மந்திரியின் திட்டத்தை ராஜா தண்டோராப் போட்டு நாட்டு மக்களுக்குத் தெரிவித்தார்.
‘நாட்டில் இருக்கும் அத்த�ன் பேய்களும், பிசாசுகளும், பூதங்களும் கூண்டில் அடைக்கப் படும். கூண்டுகள் ராஜவீதி வழியாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட அவைகளை ராஜகுமாரி உப்பரிகையில் இருந்து பார்க்கப் போகிறார். பிரஜைகள் அனைவரும் வந்து அந்தக் காட்சியைத் தூரத்தில் இருந்து பார்க்க வேண்டும். இதனால் பேய், பிசாசு பற்றி பயப்படும் குழந்தைகளுக்கு பயம் போய் விடும். யாரும் கூண்டுகளுக்கு அருகில் வரக்கூடாது.
பிடிபட்டவை அனைத்தையும் காட்டில் கொண்டு விடப்போகிறோம். இனி அவை நம் நாட்டில் இருக்காது. இனி யாரும் பேய், பிசாசு, பூதங்களைப் பற்றி பயப்படத் தேவை இல்லை. அடுத்த வாரம் திங்கட்கிழமை சரியாக ஏழரை மணிக்கு ராஜ வீதி வழியாக ஊர்வலம் புறப்படும். ஊர்வலத்தை எல்லோரும் கட்டாயம் வந்து பார்க்க வேண்டும்.‘
தண்டோராவைக் கேட்ட மக்கள் ஆச்சரியப் படவில்லை. ராஜா, ராஜகுமாரியை குணப்படுத்த திட்டம் தீட்டி இருக்கிறார் என்று தெரிந்து கொண்டார்கள். அதோடு பேய், பிசாசுகள் பற்றி பயப்படும் குழந்தைகளின் பெற்றோர்கள் மகிழ்ச்சியும் அடைந்தார்கள்.
அந்த நாளும் வந்தது. ராஜ வீதியில் மக்கள் கூட்டம் அலை மோதியது. ராஜா, ராணி, ராஜகுமாரி உப்பரிகையில் அமர்ந்து இருந்தார்கள்.சரியான சமயத்திற்கு முதல் வண்டி வந்தது. அதில் இரண்டு ஆண் பேய்கள். அருவருப்பாக ஆக்ரஷத்தோடு கத்திக் கொண்டே கூண்டின் இரும்புக் கம்பிகளின் சந்துகளில் கைகளை நீட்டி ஆட்டின. அதற்குப் பின்னால் ஆண் பேய்கள் கொண்ட பல வண்டிகள் வந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக காணப்பட்டது. அவைகள் பயப்படும் படியாக பலவித சப்தங்களை எழுப்பின..
அதற்குப் பின்னால் பெண் பேய்களின் வண்டிகள். ரம்பம் போன்ற பற்களை இளித்துக் கொண்டு கத்தின. ஜனங்களைப் பார்த்து அவர்களை சாப்பிட வாயைப் பிளந்தன. அதில் கூராக இருந்த பற்களையும் வாய் வழியாக வந்த நெருப்பையும் பார்த்து குழந்தைகள் பயந்து பெற்றோர்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.அடுத்து வந்தன குழந்தை பிசாசுகளின் வண்டிகள். அவைகள் குதித்துக் கொண்டு க்ரீச் க்ரீச் என்று கத்தி சப்தம் எழுப்பின. கூண்டின் கம்பிகள் மிக நெருக்கமாக இருந்ததால் அவைகள் வெளியே வர முடியவில்லை.
கடைசியில் ஒரு வண்டியில் பெரிய பூதம் ஒன்று இரும்புக் கயிற்றால் கட்டப் பட்ட நிலையில் வந்தது. அது பயங்கரமாக கத்திக் கொண்டு கயிற்றைக் கடித்துக் கொண்டிருந்தது. கம்பிகள் பெரிதாக இருந்ததால் வளைத்து முறிக்கவும் கடித்து துண்டாக்கவும் முடியவில்லை. ஆனால் உறுமல் சப்தம் காதைப் பிளந்தது கடைசி வண்டி கடந்தபோது அறிவிப்பு செய்தார்கள். பேய் பிசாசுகளைப் பிடிக்கும் போது பூதங்கள் பயந்து காட்டுக்குள் ஓடி விட்டன. ஒரே ஒரு பூதத்தைதான் பிடிக்க முடிந்தது. இனி நாட்டின் குடிமக்கள் யாரும் இவைகளைப் பற்றி எப்போதும், எந்த நேரத்திலும் பயப்பட வேண்டாம்.
ராஜகுமாரி தாமரைச் செல்விக்கு ஒரே மகிழ்ச்சி. பேய், பிசாசு, பூதம் வராது என்று சொல்லிக் கொண்டே கைகளைத் தட்டினாள். அன்று முதல் பயம் போய் பழைய நிலைக்கு வர ராஜாவும் ராணியும் மந்திரியைப் பாராட்டினார்கள். அதே போல் அந்த நாட்டிலுள்ள பயந்த குழந்தைகளும் இந்த விஷயத்தில் தைரியசாலி ஆகி விட்டார்கள். ராஜா மந்திரிக்கு நன்றி சொல்லி நிறைய பரிசுகள் கொடுத்தார்.
“ஆனா அவைகளை எப்படிப் பிடித்தார்கள் பாட்டி? ஒண்ணும் புரியல்லையே?”
“அதை நான் சொல்றேன் தம்பி. கூண்டில் இருந்த பேய், பிசாசு, பூதம் எல்லாம் வேஷம் போட்ட மனிதர்கள். ராஜகுமாரியின் பயத்தைப் போக்க மந்திரி செய்த தந்திரம் தானே பாட்டி?”
“புவனா சரியா யூகிச்சி சொன்னே. பேயும் இல்லை பூதமும் இல்லை. எல்லாம் மனப்பயம்தான். பயப்படும் விஷயங்களை அளவுக்கு மீறி நி�னத்துக் கொண்டிருந்தால் மனதில் பதிந்து விடும். அவைகள் கனவில் வந்து பயமுறுத்தலாம். பேய், பூதங்களைச் சொல்லிச் சிலர் குழந்தைகளைப் பயமுறுத்துவார்கள். சந்தருடைய பயத்தைப் போக்க என்ன தந்திரம் செய்யலாம் சொல்.”
“எனக்கு இந்தக் கதை கேட்டதும் பயம் போய் விட்டது, பாட்டி” பாட்டிக்கும் பேத்திக்கும் சந்தரின் மாற்றம் நிம்மதி அளித்தது.