அப்பா சொன்ன கதை
காந்தனுக்கு நான்கு வயது முடிகிறது. ஒவ்வோர் இரவும் அப்பா அவனுக்கு ஒரு கதை சொல்ல வேண்டும். ஒரு தடவை சொன்ன கதையை மறு தடவை சொல்ல முடியாது. சொன்னால் அவனுக்குக் கெட்ட கோபம் வரும்.
காந்தனுக்காக அப்பா கதைகள் தேடி அலைவார். ஒரு சனிக்கிழமை இரவு கதை எதுவும் அவர் நினைவுக்குவர மறுத்தது. திடீரென அண்மையில் வாசித்த ஆங்கிலக் கதை ஞாபகத்துக்கு வந்தது. அது மிகவும் சிறியது. காந்தனுக்கோ நீ...ஈ....ஈண்ட கதை வேண்டும்.
அப்பா ஒருவாறு காதும் மூக்கும் வைத்துக் கதையை நீட்டினார். அந்தக் கதையின் சுருக்கம் இது. ஒரு சிறுவன் மிகுந்த கோபக்காரன். அதைத் தணிக்க அவனது அப்பா வழி கண்டு பிடித்தார்.
ஆணிகள் நிறைந்த ஒருபையை அவனிடம் கொடுத்தார். கோபம் வரும் ஒவ்வொரு தடவையும் வேலி மரத்தில் ஓர் ஆணி அடிக்குமாறு அவர் வேண்டினார். முதல் நாள் அவன் முப்பத்தேழு ஆணிகள் அடிக்க நேர்ந்தது. நாளடைவில் எண்ணிக்கை குறைந்து வந்தது.
ஆணிகள் முடிந்ததும், அப்பா அவனை வேலிக்கு இட்டுச் சென்றார். "நல்லது மகனே, ஆணிகள் ஏற்படுத்திய துளைகளைப் பார்த்தாயா? நீ கோபத்தில் கொட்டும் வார்த்தைகளும் அவ்வாறே மாறாத வடுக்களை ஏற்படுத்துகின்றன. ஆகவே கோபங் கொள்ளாதே'' என அவர் அறிவுரை பகிர்ந்தார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, அம்மாவும் அப்பாவும் வேலைக்குப்போகாத நாள். ஆயினும் கிணற்றபடி போர்க்களமாக மாறும் நாள். அது காந்தன் திருமுழுக்குப் போடுந் தினம் அல்லவா? அன்றைய தினம் அவனது தலையில் தண்ணீர் படுவதை அவனால் தாங்க முடியாது. அம்மாவும் அப்பாவும் அவனை அமுக்கிப் பிடிக்க முடியாது. திணறுவார்கள். அவன் திமிறுவதும், அலறுவதும், நிலத்தில் உதைப்பதுவும் கண்கொள்ளாக்காட்சிகளாக அமையும்.
அவனது கோபம் எல்லை மீறும். கையில் அகப்பட்டதைத் தூக்கி அடிப்பான். அன்றும் ஒருவாறு போர் ஓய்ந்தது. அம்மா அவனைச் சாப்பிட அழைத்தார். காந்தனைக் காணவில்லை. அம்மாவும் அப்பாவும் அவனைத்தேடினர். வீட்டுக்குப் பின் புறத்தில் ஏதோ சத்தங் கேட்டது. இருவரும் அங்கே விரைந்தனர். அவர்களது வீட்டுக்குப்பின்னால், இருந்த வேப்ப மரத்தில் காந்தன் ஆணி அடித் துக்கொண்டிருந்தான். சுத்தியல் அவனது பிஞ்சு விரல்களைப் பதம் பார்த்துவிடுமே என அம்மா பதறினார். அவனைத் தடுக்க முயன்றார். காந்தனது தைரியத்தைக் குலைப்பது தவறு என அப்பா சொன்னார். மகனின் செயலை அவர் இரசித்துச் சிரித்தார்.