எங்களுர் மயானம்
தந்தை பிறந்திட விந்து கொடுத்தவன்
சாய்ந்ததும் இக்காடே - அவன்
விந்து சுமந்தவள் வேளை முடிந்ததும்
வீழ்ந்ததும் இக்காடே
'அடக்கம்' என்னும் சொல்லின் அர்த்தம்
அறிந்ததும் இக்காடே - நான்
கடக்கும் பொழுதில் அடிக்கடி வயிற்றைக்
கலக்கிய திக்காடே
கள்ளி இலந்தையும் காட்டு நெருஞ்சியும்
கலந்ததும் இக்காடே - சில
குள்ள நரிக்குலம் கும்மிகள் கொட்டிக்
குலவுவ் திக்காடே
விடலைப் பருவப் பொழுதில் மரணம்
விளக்கிய திக்காடே - அந்தச்
சுடலையில் பற்றிய சுடரில்என் நெற்றி
சுட்டதும் இக்காடே
பணபலம் ஜாதி கெளரவம் கொஞ்சம்
பதுங்குவ திக்காடே - அட
எந்தெனும் எண்ணம் ஆனவம் கர்வம்
எரிந்ததும் இக்காடே
யாருக்கு இந்நிலம் யாருக்கு என்று
போருக்குச் செல்பவர்க்கும் - அட
ஊருக்கு வெளியே உள்ளதுன் நிலமென்(று)
உரைத்ததும் இக்காடே
தம்பி ஒருவனும் தங்கை ஒருத்தியும்
சரிந்ததும் இக்காடே - நான்
கும்பி எரிந்து கோலம் கலைந்து
குலைந்ததும் இக்காடே
செத்தவர் பார்த்து வந்தவர் அழுது
தேம்புவ திக்காடே - ஆனால்
செத்தவர் ஓடுகள் வந்தவர் பார்த்துச்
சிரிப்பதும் இக்காடே
குணத்தைச் சொல்லிக் குமுறிப் புலம்பிக்
குழைவதும் இக்காடே - ஆனால்
பிணத்தின் காதில் தங்கம் இருந்தால்
பியிப்பதும் இக்காடே
இனிமேல் குழிகொள இடமிலை எனும்படி
இளைத்ததும் இக்காடே - அதனால்
பிணமேல் பிணம்விழ ஒருகுழி பலபிணம்
பெறுவதும் இக்காடே
வீழ்ந்த பிறகு பன்னீர் பூக்கள்
விளைவதும் இக்காடே - பலர்க்கு
வாழ்ந்த பொழுதில் வாரா வசதிகள்
வாய்ப்பதும் இக்காடே
கண்ணீர்த் துளியில் ஞானம் கலந்து
கசிந்ததும் இக்காடே - வாழ்க்கை
விண்ணில் அல்ல மண்ணில் என்று
விளக்கிய திக்காடே