ஹைகூ, ஹைக்கூ,ஹைகூ,ஹைய்கு, எனப் பலவாறு சுட்டப்படும் இக்கவிதை வடிவம் கீழ்த்திசைப் பண்பாட்டில் இறுதியாக மலர்ந்த மலர். சிந்தர், துளிப்பா, மின்பா, நறுக்கவிதைகள், மின்மினிக் கவிதைகள், வாமனக் கவிதைகள் என்ற வேறுபெயர்களும் இதற்குண்டு.இது ஒரு வகையான வாழ்க்கை நியதி. கவிஞன் எண்ணத்தை நேரடியாக வெளியிட வேண்டும் வீண்சேர்க்கையாக சொற்கள் இருக்கக்ககூடாது.எதுகை, சந்தம் கருதி, கவிதையின் பொருளம்சத்திற்குப் புறம்பானச் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது என்று அறிமுகமாகிய ஹைக்கூ கவிதை ஜப்பானில் தோன்றி இன்று உலகம் முழுதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஹைகூ என்பதற்கு 5,7,5 அசைகள் கொண்ட ஜப்பானிய கவிதை என சேம்பர்ஸ் அகராதி பொருள் சொல்கிறது. கீழ்த்திசை பௌத்த சிந்தனையில் மகிழ்த்து சீனத்துப் பண்பாட்டில் திளைத்து, ஜப்பானிய அழகுப் பார்வையில் மலர்ந்து கவிதை மணம் வீசுகின்றது ஹைகூ என்பர்.